ஊடகவியலாளாளர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து அம்பாறையில் ஆர்ப்பாட்டம்
அம்பாந்தோட்டையில் ஊடகவியலாளாளர் ஒருவர் கடற்படைத் தளபதியினால் தாக்கப்பட்டமையைக் கண்டித்து, ஊடகவியளாளர்கள் இன்று (திங்கட்கிழமை) அம்பாறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பாறை மாவட்ட ஊடக அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஊடகவியளாளர் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) காலை அம்பாறை மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் ஒன்றுதிரண்டு தலையில் கறுப்புப்பட்டியை அணிந்தவாறு இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நல்லாட்சி அரசாங்கம் கூட ஊடகவியலாளர்களை பாதுகாப்பதில் நடவடிக்கை எடுக்கவில்லை, மஹிந்த அரசின் ஊடக அடக்குமுறை போன்று நல்லாட்சியிலும் ஊடக அடக்குமுறையா, அரசே ஊடகம் மீது கைவைக்காதே, கடற்படை தளபதிக்கு பைத்தியமா? என்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கோஷம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பாறை மாவட்டத்தைப் பிரதிபலிக்கும் பல ஊடக அமைப்புக்கள் கிழக்கு மாகாண தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம், அம்பாறை மாவட்ட பௌத்த மத துறவிகள், அகில இலங்கை பொது ஊழியர் சங்கம், அகில இலங்கை மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கையில் ஊடகவியளாளர்களுக்கு எதிரான இவ்வாறான நடவடிக்கை அரசாங்கம் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் வேதனையான விடயம் மஹிந்த அரசின் ஊடக அடக்குமுறை போன்று நல்லாட்சியிலும் ஊடக அடக்குமுறை தொடருமானால் இதனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் இதற்கு உடனடியாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.