எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்-அரசியல் தீப்பொறி! செ.சிறிதரன்
2016 ஆம் ஆண்டு தமிழ் மக்கள்
பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தார்கள். ஆனால் அந்தப் போராட்டங்களுக்கு வெற்றியளிக்கத்தக்க வகையில் காரியங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை. புதிய அரசாங்கத்தில் தங்களுக்கு நன்மைகள் ஏற்படும். பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற அவர்களுடைய எதிர்பார்ப்பு பெருமளவில் ஏமாற்றத்திலேயே முடிவடைந்திருக்கின்றது.
பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தார்கள். ஆனால் அந்தப் போராட்டங்களுக்கு வெற்றியளிக்கத்தக்க வகையில் காரியங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை. புதிய அரசாங்கத்தில் தங்களுக்கு நன்மைகள் ஏற்படும். பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற அவர்களுடைய எதிர்பார்ப்பு பெருமளவில் ஏமாற்றத்திலேயே முடிவடைந்திருக்கின்றது.
அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதன் மூலம் பல காரியங்களை வெற்றிகரமாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பும் கானல் நீராகியிருக்கின்றது என்றே கூற வேண்டியிருக்கின்றது.
அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற ஒரு முக்கியமான சிக்கல் நிறைந்த கேள்வியுடனேயே புதிய ஆண்டாகிய 2017 ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது. புதிய ஆண்டின் முதல் நடவடிக்கையாக நல்லிணக்க வாரம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
நாட்டின் சமாதானம், ஐக்கியம், புதிய அரசியலமைப்பின் ஊடான ஓர் அரசியல் தீர்வு, பொறுப்பு கூறும் செயற்பாட்டில் மேலும் காலம் தாழ்த்தப்படுமா என்ற சந்தேகம் ஆகிய பல்வேறு முக்கிய விடயங்களில் முரண்பாடான நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே 2016 ஆம் ஆண்டு விடைபெறுகின்றது. இந்த நிலையில் தான் அடுத்தது என்ன என்ற கேள்வி தொக்கி நிற்கின்றது.
ஜனவரி 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையில் நாட்டு மக்கள் மத்தியில் சமாதானம், ஒற்றுமை, சகோதரத்துவத்தை மேம்படுத்துகின்ற ஒரு நோக்கத்தைக் கொண்டதாக இந்த நல்லிணக்க வாரம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் கூறியிருக்கின்றது.
ஜனவரி 8 ஆம் திகதி என்பது நாட்டில் எதேச்சதிகாரத்துக்கு முடிவுகட்டி, நல்லாட்சிக்கு வித்திட்ட நாளாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெரிவு செய்யப்பட்ட நாளாகப் பதிவாகியிருக்கின்றது. அவர் ஜனாதிபதி பொறுப்பை ஏற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நாளிலேயே தேசிய நல்லிணக்க வாரத்தை அனுஷ்டிப்பதற்கான திகதியாகக் குறிக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த ஒரு வருட காலத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக அரசாங்கத் தரப்பினர் கூறுகின்றனர்.
அதனை ஆமோதிப்பது போன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் புதிய ஆண்டில் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படும் என்ற தமது அசைக்க முடியாத நம்பிக்கையை வெளியிட்டிருக்கின்றார். அத்துடன் பொறுமை காத்து அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் மீண்டும் முன்வைத்துள்ளார்.
2016 ஆம் ஆண்டில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டிருந்த அவரிடம் அது சம்பந்தமாக அரசியலில் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றங்கள் நிகழவில்லையே என சுட்டிக்காட்டப்பட்டது. ஆயினும் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
2016 ஆம் ஆண்டில் மாற்றங்கள் நிகழவில்லை என்று கூற முடியாது. முன்னேற்றகரமான விடயங்கள் நடைபெற்றிருக்கின்றன. பாராளுமன்றம் அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டுள்ளது. புதிய அரசியல் சாசனத்தை இயற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியல் சாசன சபையால் வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினால் நியமிக்கப்பட்ட ஆறு உபகுழுக்களின் அறிக்கைகள் வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றன. 45 தடவைகள் கூடி விடயங்களை ஆராய்ந்த வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. சில காரணங்களுக்காக அந்தக் கருமம் தாமதமாகியுள்ளது. எவ்வாறாயினும் இன்னும் சொற்ப காலத்தில் அந்த விடயங்கள் முறையாக நடைபெற்று அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
ஜனவரி 9, 10, 11 ஆம் திகதிகளில் விவாதங்களும் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளன. ஆனால் நான் கூறிய கணிப்பின் பிரகாரம் கருமங்கள் நடைபெறுவதற்கு சில தாமதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அந்தக் கருமங்கள் விரைவில் நடைபெற வேண்டும். அதற்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று இரா.சம்பந்தன் இந்த வருட இறுதியில் காணப்படுகின்ற நிலைமைகள் குறித்து கோடி காட்டியிருக்கின்றார்.
ஆயினும் அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் பிறக்கின்ற புதிய ஆண்டின் தொடக்க நிலையில் அரசியல் ரீதியான நிலைமைகளில் நம்பிக்கையற்ற நிலையிலும் எச்சரிக்கை விடுக்கும் பாணியிலும் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனர். இதனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்குள்ளேயே - கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் முரண்பாடான நிலைமையில் இருப்பதைக் காண முடிகின்றது.
அரசியல் தீர்வு விடயத்தில் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் விரும்புகின்ற ஓர் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கல் இடம்பெற வேண்டும். ஒற்றையாட்சி முறை நீக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் சார்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வைத்துள்ள கோரிக்கையை அரசாங்கமும், அதனைச் சார்ந்த அரசியல் தரப்பினரும் முற்றாக நிராகரித்திருக்கின்றனர்.
குறிப்பாக ஒற்றையாட்சியில் எந்தக் காரணத்தைக் கொண்டும் மாற்றம் ஏற்படமாட்டாது. மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று அரசியல் தீர்வுக்கு மலைபோல தமிழர் தரப்பு நம்பிக்கை வைத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இதனால் சீற்றம் கொண்ட நிலையில் மாவை சேனாதிராஜா எம்.பி. ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒற்றையாட்சி என்றால் நாடு பிளவுபடும் என்று எச்சரிக்கை செய்துள்ளார். அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அரசாங்கத்திற்குக் காலக்கெடு குறித்து எச்சரிக்கை விடுக்கும் தொனியில் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
நல்லிணக்க வாரம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பானது, எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தானாக முன்வந்து ஒப்புக்கொண்டு இணக்கமளித்துள்ள பொறுப்புக்கூறல் விடயங்களை நிறைவேற்றுவதற்கு மேலும் கால அவகாசத்தைக் கோருவதற்கான ஒரு முன்னெடுப்பாக வெளியிடப்பட்டிருக்கின்றது என்று அவதானிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள் என்பவற்றிற்குப் பொறுப்பு கூறுவதற்கான காலக்கெடு எதிர்வரும் மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ளது. ஆயினும் அந்த விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசாங்கம் இன்னும் திருப்தியளிக்கத்தக்க வகையில் முன்னெடுக்கவில்லை. எனவே, இந்தக் காலக்கெடுவை மேலும் நீடிக்கச் செய்வதற்கான ஒர் உத்தியாக இந்த அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டிருக்கின்றது என்பது அவர்களின் கருத்தாகும்.
ஆனால் அதேவேளை. கைதிகள் விடுதலை, நிலங்கள் விடுவிப்பு, வடக்கில் இராணுவத்தை குறைத்தல், காணாமல் போயுள்ளவர்கள் பற்றிய விடயத்திற்குப் பொறுப்பு கூறுதல் போன்ற விடயங்களில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. நல்லிணக்கம், ஐக்கியம், சமாதானம் என்பவற்றை மேம்படுத்துவதற்கு இத்தகைய நடவடிக்கைகள் பேருதவி புரிந்திருக்கும்.
இந்த நடவடிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும், எனவே உண்மையான நல்லிணக்கத்தை நோக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வதைக் கைவிட்டு விட்டு, நல்லிணக்கத்திற்கான வாரம் அனுஷ்டிக்க வேண்டும் என்று நிலைமைகளை திசை திருப்புகின்ற போக்கில் அரசாங்கம் நடந்து கொண்டிருக்கின்றது என்று அவதானிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
இதே கருத்தை ஒட்டியதாகவே பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன. ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள அமர்வில் இலங்கை அரசாங்கம் மேலும் கால அவகாசம் தேவை என கோர இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக மீள்குடியேற்றப் பணிகளை நிறைவுக்கு கொண்டு வருதல், கண்ணி வெடிகள் அகற்றுதல், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு முறையான வாழ்வாதாரத்தினை வழங்குதல் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் செய்ய வேண்டும். இல்லையேல் நாங்கள் வித்தியாசமாக செயற்பட வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரிக்கை தொனியில் தெரிவித்துள்ளார்.
'எமக்கு மேலும் காலஅவகாசம் தாருங்கள் என ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவில் விண்ணப்பிக்க வேண்டிய தேவை தற்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கின்றமையை நாம் உணர்கின்றோம். ஆயினும் அரசியலமைப்பு உருவாக்க பணிகள் சரியாக நடக்க வேண்டும். குறிப்பாக தாமதமின்றி வரைவுகள் வெளியாகி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற வரையிலான செயற்பாடுகள் பெப்ரவரி மாதமளவிலே வர வேண்டும். அவ்வாறு வருமாகவிருந்தால் ஐ.நா. சபையில் மேலும் அவகாசம் கோருகின்ற விண்ணப்பத்தை முன்வைப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்' என அவர் கூறியிருக்கின்றார்.
அரசியலமைப்பு உருவாக்கம் செய்யப்படுகின்ற அதேவேளையில், மற்றைய சில விடயங்களை முன்னெடுப்பது அரசாங்கத்திற்கு அசௌகரியமாகவிருக்கும். அவற்றை முன்னெடுக்க முடியாமலும் இருக்கலாம். ஆனால் கைதிகள் விடுதலை, நிலங்கள் விடுவிப்பு, வடக்கில் இராணுவத்தை குறைத்தல், மீள்குடியேற்றப் பணிகளை நிறைவுக்கு கொண்டு வருதல், கண்ணி வெடிகள் அகற்றுதல், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு முறையான வாழ்வாதாரத்தினை வழங்குதல் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குதல் போன்ற உடனடியாகச் செய்யக்கூடிய விடயங்களை அரசாங்கம் காலம் தாழ்த்திக்கொண்டிருக்காது மேற்கொள்ள முடியும்.
ஆகவே பெப்ரவரி நடுப்பகுதி வரையிலான காலப்பகுதியினுள் அரசாங்கம் ஆகக்குறைந்தது இந்த விடயங்களிலாவது முற்போக்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அத்துடன் அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஏற்றுக்கொண்டு வரைவுகள் வெளியாகவேண்டும்.
அவ்வாறான சந்தர்ப்பத்தில் மாத்திரமே அரசாங்கத்திற்கு காலஅவகாசம் கொடுப்பற்கு இணங்குவோம். அது நியாயமானதாகவும் இருக்கும். அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாத பட்சத்தில் நாங்கள் வித்தியாசமாக செயற்படவேண்டிய சூழ்நிலை இயல்பாகவே ஏற்படும். அதற்காக நாங்கள் பின்னிற்கப் போவதில்லை' என்று அவர் உறுதியாகத் தெரிவித்திருக்கின்றார்.
எனவே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மும்மூர்த்திகள் என கருதப்படுகின்ற கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் பேச்சாளராகிய சுமந்திரன் ஆகியோரின் வேறுபட்ட கருத்துக்கள், பிறக்கவுள்ள புதிய வருடத்தை சந்தேகத்தோடு நோக்கத்தக்க வகையிலேயே வெளியாகியிருக்கின்றன.
கடந்த 2015 ஆம் ஆண்டின் இறுதியில் நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று சில மாதங்களே ஆகியிருந்த நிலையிலேயே -நாடு 2016 ஆம் ஆண்டுப் பிறப்பை எதிர் நோக்கியிருந்தது. புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்று அப்போது ஒரு வருடம் நிறைவுபெற இருந்தது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான புதிய அரசாங்கம் பதவி ஏற்றிருந்த சூழல். அப்போது, புதிய வருடத்தில் 2016 ஆம் ஆண்டு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும். நிலைமைகளைக் கவனமாகக் கையாள வேண்டும் என்ற கோரிக்கை வெளிப்பட்டிருந்தது.
எதேச்சதிகாரப் போக்கிற்கு முடிவுகட்டி ஆட்சியைக் கைப்பற்றியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார். அதற்கான நடவடிக்கைகளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் துணிவோடும் உறுதியாகவும் மேற்கொள்வார் என்று யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டிருக்க வில்லை. இருந்த போதிலும் 2015 ஆம் ஆண்டின் இறுதியில் 2016 ஆம் ஆண்டை ஏமாற்றம் கலந்த எதிர்பார்ப்போடு வரவேற்றிருந்தனர்.
ஆனால் 2016 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தார்கள். ஆனால் அந்தப் போராட்டங்களுக்கு வெற்றியளிக்கத்தக்க வகையில் காரியங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை. புதிய அரசாங்கத்தில் தங்களுக்கு நன்மைகள் ஏற்படும். பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற அவர்களுடைய எதிர்பார்ப்பு பெருமளவில் ஏமாற்றத்திலேயே முடிவடைந்திருக்கின்றது.
அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதன் மூலம் பல காரியங்களை வெற்றிகரமாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பும் கானல் நீராகியிருக்கின்றது என்றே கூற வேண்டியிருக்கின்றது. முறையான வழிகளில் செய்திருக்கக் கூடிய காரியங்களைக்கூட புதிய அரசாங்கம் செய்யவில்லை என யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிடம் கவலை வெளியிட்டபோது, அவர்களை பொறுமை காக்கும்படியும் நிலைமைகளைக் குழப்பிவிடுகின்ற வகையிலான காரியங்களை முன்னெடுக்கக் கூடாது என்றும் ஆறுதல் கூறி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை பொறுமை காக்க வேண்டும் என்று கோரியிருந்தது.
ஆயினும் 2016 ஆம் ஆண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என உறுதியளித்திருந்த அல்லது தனது நம்பிக்கையை கணிப்பை வெளியிட்டிருந்த தலைவர் இரா.சம்பந்தன் ஒரு வருடம் கழிந்த நிலையிலும், அதே கோரிக்கையைத்தான் முன்வைத்துள்ளார்.
அதேவேளை இலவு காத்த கிளியைப் போல தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாத நிலையில் ஏமாற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்ற மக்களின் மனவோட்டத்தை, அந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் மாவை சேனாதிராஜாவும், சுமந்திரனும் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுடைய மன உணர்வுகளை இவர்கள் இருவரும் வெளிப்படுத்தியுள்ளதாகக் கருதினாலும்கூட, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒரு வருடகால அரசியல் செயற்பாட்டினால் அந்த மக்களுக்கு எற்பட்டுள்ள நன்மை என்ன, தொடர்ந்தும் அவர்கள் ஏமாற்றப்படமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. அந்தக் கேள்விக்கு உரிய பதில் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது. இந்த நிலையில் அடுத்து என்ன செய்யப் போகின்றீர்கள்? தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், தன்னளவில் குழப்பமான ஒரு நிலையில் உள்ள அரசாங்கத்தை எந்த வகையில் கையாளப் போகின்றீர்கள் என்ற கேள்விகளும் இப்போது எழுந்திருக்கின்றன.
நாட்டின் பிரதான கட்சிகளாகிய ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்துள்ள நல்லாட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் பொது எதிரணி என்றழைக்கப்படுகின்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவாளர்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றார்கள்.
புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி முறைமையை மாற்றப் போவதில்லை. பௌத்த மதத்திற்கான முன்னுரிமை நிலையிலும் மாற்றங்கள் செய்யப் போவதில்லை என்ற பற்றுறுதியோடு செயற்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்தப் போகின்றது. தமிழ் மக்களுக்கு சிங்கள மக்களின் உரிமைகள் உரித்துக்களை தாரை வார்த்துக் கொடுக்கப் போகின்றது, இதனால் சிங்கள மக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படப் போகின்றது என்று தீவிரப் பிரசாரத்தை இந்த எதிரணியினர் முன்னெடுத்திருக்கின்றார்கள்.
அது மட்டுமல்ல. அரசாங்கத்தை பலமிழக்கச் செய்யப் போவதாகவும் அவர்கள் சூளுரைத்துச் செயற்பட்டு வருகின்றார்கள். இதனால் மிகத் தீவிரமான உள்வீட்டு அரசியல் குழப்பத்தில் சிக்கியுள்ள நல்லாட்சி அரசாங்கம், தனக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிச் செயற்பட்டு வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் எச்சரிக்கையையும் காலக்கெடுவையும் எந்த அளவுக்குக் கவனத்தில் எடுத்துச் செயற்படப் போகின்றது என்பது தெரியவில்லை.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற அக்கறையை முதன்மைப்படுத்தி, உள்வீட்டு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள அரசாங்கத் தரப்பினர் புதிய வருடத்தில் துரிதமாகக் காரியங்களை முன்னெடுப்பார்களா என்று எதிர்பார்க்க முடியாது. இருவேறு கட்சிகளைச் சார்ந்தவர்களான ஜனாதிபதியும் பிரதமரும் அவர்கள் இணைந்து அமைத்துள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் அடிமடியில் கைவைக்கும் வகையில், பொது எதிரணியிடமிருந்து கிளம்பியுள்ள எதிர்ப்பைச் சமாளித்து அரசாங்கத்தை ஸ்திரப்படுத்த வேண்டிய ஒரு கட்டாய நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
நெருக்கடியான ஓர் அரசியல் சூழலுக்குள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்ற அரசியல் ரீதியான அனுதாபம் இருக்கலாம். ஆனால் ஆட்சியாளர்களிடம் அதற்கான செயலாற்றலுடன் கூடிய விருப்பு இருக்கும் என்றும், அந்த அனுதாபத்துக்கு அமைவாக அவர்கள் காரியங்களை முன்னெடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது.
தங்களுடைய இருப்பைக் காத்துக்கொள்வதற்காகப் போராடிக்கொண்டிருப்பவர்கள், யுத்தம் முடிவடைந்து சுமார் எட்டு வருடங்களாகப் புரையோடிப் போயுள்ள நிறைவேற்றியிருக்கக் கூடிய பிரச்சினைகளுக்கு மிகவும்
குறுகியதொரு காலப்பகுதிக்குள் தீர்வு காண்பார்கள் என்று கூறமுடியாது. அவ்வாறு அவர்கள் செயற்படு வார்கள் என்று எதிர்பார்த்திருக்கவும் முடியாது. மொத்தத் தில் பல்வேறு நிலைகளில் நிச்சயமற்ற தன்மையைப் பிரதிபலித்துள்ள 2016 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் குழப்பகரமான ஓர் அரசியல் சூழலிலேயே மக்கள் புதிய ஆண்டாகிய 2017 ஆம் ஆண்டை வரவேற்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள். இருப்பினும் நம்பிக் கையை அடித்தளமாகக் கொண்டே மனித வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது. எனவே, இந்த அடிப்படை யில், நன்மைகள் நிகழும் என்ற எதிர்பார்ப்பை வெளிப் படுத்தாவிட்டாலும், நிலைமைகளை மிகவும் மோசமாக்க மாட்டாது என்ற எதிர்பார்ப்புடன் புதியவருடத்தை எதிர் கொள்வதே நல்லது
முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்