Breaking News

ஆரூட எச்சரிக்கையால் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகரிப்பு



சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வெளியான ஆரூடங்களை அடுத்து அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும் ஜனவரி 26ஆம் நாளுக்குள் உயிரிழப்பார் என்று விஜிதமுனி ரோகண என்பவர் ஆரூடம் வெளியிட்டுள்ளார்.

இந்த ஆரூடத்தின் பின்னால் ஒரு அரசியல் சதி இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சின் செயலர் நிமல் போபகே கூறியிருந்தார்.

இந்த நிலையில், சிறிலங்கா அதிபரின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்தார்.

ஆரூடம் மற்றும் அதன் பின்னால் சதித் திட்டங்கள் உள்ளனவா என்பது பற்றி பாதுகாப்புத் தரப்புகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

பாதுகாப்புக் காரணங்களுக்காக அதுபற்றிய தகவல்களை வெளியிட முடியாது, எனினும், சிறிலங்கா அதிபரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.