Breaking News

காந்தி தேசம் தமிழர்களுக்கு என்ன செய்தது - ஜெரா



முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவலாக காந்தி, பாரதியார், வள்ளுவர் சிலைகள் அமைக்கும் பணிகள் தடல்புடலாக இடம்பெற்று வருகின்றன. முதற்கட்டமாக, முல்லைத்தீவு நகரின் மையத்தில் காந்தியின் சிலை அமைப்புப் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

இந்த சிலை அமைப்புப் பணிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்னின்று நடத்திவருகின்றார்.

இதை செய்தியாகப் படிக்கும்போது,

பல வருடங்களாக வறுமையில் முதலிடத்தில் இருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு செய்ய வேண்டிய அபிவிருத்தி பணிகள் ஆயிரம் இருக்க, காந்தி சிலையா இப்போது முக்கியம் என்ற கேள்வி உங்களுக்கும் இயல்பாகவே எழலாம்?

முல்லைத்தீவில் இருக்கின்ற கடல், நன்னீர் வளங்கள் முழுவதிலும் சொத்துப் பங்கு கேட்டு வந்திருக்கும் புதிய குடியேறிகளுக்கு சரியான பதில் தர தகுதி வாய்ந்த அரசியல்வாதிகள் இல்லாதிருக்கும்போது, காந்தி சிலையை தூக்கிக் கொண்டு காவடியாடும் அரசியல்வாதிகளும் அங்குதான் இருக்கின்றனர் என்ற வியப்புச் செய்தியும் உங்களுக்குள் எழும்.

முல்லைத்தீவின் கரையாக அரித்துவரும் நில - வாழ்வாதார அபகரிப்புக்களை தடுத்து நிறுத்த போராடாத அரசியல் தலைவர்கள் பாரதிக்காக சிலையெடுக்கத் துடிக்கும் நகைச்சுவை காட்சிகளையும் பார்த்துத்தான் ஆக வேண்டும்.

நல்லாட்சி மலர்ந்து இரண்டாவது ஆண்டு வரும்போதும் கூட முல்லைத்தீவு மாவட்டத்தில் அபகரிக்கப்பட்ட காணிகளில் ஒரு துண்டுகூட விடுவிக்கப்படவில்லையே எனக் கிளர்ந்தெழாத அரசியல்தலைவர்கள் காந்திக்கு சிலை முக்கியம் எனக் கிளர்ந்தெழும் நிலைலையும் அங்கு உண்டு.

இப்படி செயற்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டிய அரசியல் பணிகள் பல இருக்க சிங்களத் தீவுக்கோர் பாலம் அமைக்கக் கோரிய இந்திய தேசவுருவாக்கிகளின் சிலை நமக்கு தேவைதானா?

வடக்கின் பெருந்தெருக்கள் முழுவதும் போர் வெற்றி நினைவுச் சின்னங்கள். உள்ளே நுழைந்தால் இந்திய உபகண்டத்தின் கலாசார ஆக்கிரமிப்புச் சின்னங்கள் என்ற நிலையை நாமே உருவாக்கிக்கொள்ளப்போகிறோமா என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்.

அகிம்சையைப் போதித்த காந்தியின் சிலை உலகம் முழுவதும் உண்டு. எனவே நமது நிலத்திலும் இருப்பது தவறில்லை என வாதிடுவோர், புத்தரும் உலகிற்கு அகிம்சையைத் தான் போதித்தார். அவரின் சிலையும் உலகம் முழுவதும் உண்டு. எனவே வடக்கில் புத்தர் சிலைகள் வைக்கப்படுவதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் கவனியுங்கள். காந்தி உலகப் பொதுவானவர் என்ற வழியில் அனுராதபுரத்தில் ஒரு சிலையை வைக்கமுடியுமா என்பதையும் சிந்தியுங்கள்.

நம் ஊர்களில், நம் ஊர் சந்திகளில் சிலை வைத்து அவர்தம் வரலாற்றைத சந்ததி கடத்த வேண்டிய பெரியவர்கள் ஒருவர் கூடவா இல்லை? கடந்த காலத்தை சிருஸ்டித்த எத்தனைப் பெரியவர்களைக் கடந்து வந்திருக்கிறோம். மறந்து வந்திருக்கிறோம். எத்தனை படுகொலைகளின் இரத்தம் இன்னும் ஆறமால் இந்த மண்ணில் இருக்கிறது....! நம்மத்தியில் சிலை வைத்துப் பூஜிக்கப்படவேண்டிய இவ்வளவு விடயங்கள் இருக்க, காந்திக்கும், பாரதிக்கும்,வள்ளுவனுக்கும் ஏன் சிலை?

காந்தி உலகுக்கு அகிம்சையைப் போதித்தவர் இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும்தான். அதே அகிம்சையை ஈழத் தமிழன் ஏந்திய போது காந்தி தேசம் என்ன செய்தது என்பதை மறந்து போனோமா?