கூட்டமைப்பு ‘சமஷ்டி’ என்ற சொல்லில் மட்டும் தங்கியிருக்கக் கூடாது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சமஷ்டி என்ற சொற்பிரயோகத்தில் மாத்திரம் தங்கியிருக்காமல் சமஷ்டி முறைகளின் பண்புகளைக் கொண்ட தீர்வுத்திட்டத்தை ஒற்றையாட்சிக்குள் பெற்றுக்கொள்ள முன்வரவேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் சமஷ்டி என்ற சொற்பதமானது பெரும்பான்மையின மக்களிடையே பாரிய பிரச்சினையாக காணப்படுவதாக தெரிவித்துள்ள அவர், ஒற்றையாட்சிக்குள் பொலிஸ், காணி அதிகாரங்கள் உள்ளிட்ட முழுமையான அதிகாரப்பகிர்வை பெற்றுக்கொள்ள முன்வர வேண்டுமெனவும் அதனை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஜனாதிபதி மைத்திரி முழுமூச்சுடன் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள டிலான் பெரேரா, கிடைக்காது என்று தெரிகின்ற ஒரு விடயத்திற்காக காத்திருப்பதை விட கிடைக்கக்கூடிய விடயத்தை வேறு ஒரு வடிவில் பெற்றுக்கொள்வதில் தவறில்லையென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனை உணர்ந்து செயற்பட வேண்டுமெனவும் கூறியுள்ளார்.