இலங்கையை தடுக்க வேண்டும் : பிரதமர் மோடியிடம் கோரிக்கை.!
இலங்கை அரசின் புதிய சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டில்லி பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
இதன் பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில்,
பிரதமரிடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை எடுத்துரைத்துள்ளேன். அதாவது தமிழகத்துக்கு 'வர்தா' நிவாரண நிதி அதிகம் அளித்திட வேண்டும், காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகளின் பட்டியலில் இருந்து காளை மாடுகளை அகற்ற வேண்டும் மற்றும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை நிறை
வேற்ற விடாமல் தடுக்க வேண்டும் என்பதாகும்.
தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் பரப்பிலும், பன்னாட்டுக் கடல் பரப்பிலும் மீன் பிடித்தாலும், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்து கொண்டு போய் இலங்கைச் சிறையில் அடைக்கின்றார்கள். படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டு போகின்றார்கள்.
மேலும், இலங்கை அரசின் புதிய சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்க வேண்டும் இலங்கை அரசு ஒரு புதிய சட்டத்தை, 2017 ஜனவரி மாதம் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற இருக்கின்றது. அதன்படி, தமிழக மீனவர்கள் மீது ஏழு இலட்சம் முதல் ஏழு கோடி ரூபாவரையிலும் அபராதம் விதிக்க இலங்கை அரசு முடிவு செய்து இருப்பது, உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காத கொடுமை.
எனவே, நீங்கள் தூதரக உறவுகள் மூலமாக இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தத்தைக் கொடுத்து, இந்தச் சட்டம் நிறைவேற விடாமல் தடுக்க வேண்டும் என்று மோடியிடம் கூறினேன். இதுகுறித்து வெளியுறவுத்துறையோடு ஆலோசிப்பதாக மோடி கூறினார்'' என வைகோ தெரிவித்தார்.