Breaking News

மு.கா.வின் செயலாளர் யார்? – சிக்கலான சூழ்நிலையில் கூடுகிறது உயர்பீடம்



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உத்தியோகபூர்வ செயலாளர் யார் என்ற சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இக்கட்டான சூழ்நிலையில் அதன் உயர்பீடம் இன்று (புதன்கிழமை) கூடவுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் மாலை 5 மணிக்கு இச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

கட்சிக்குள் செயலாளர் நாயகம் மற்றும் செயலாளர் என இரு பதவிகள் காணப்படும் நிலையில், ஒரு கட்சிக்குள் இரு செயலாளர் பதவிகள் காணப்பட முடியாதென்றும் ஒருவரை தீர்மானித்து அறிவிக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்திருந்தார். அதுவும் குறித்த தீர்மானத்தை நாளைய தினத்திற்குள் அறிவிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறில்லாவிட்டால் எதிர்வரும் தேர்தல்களின் முஸ்லிம் காங்கிரஸ் தனது சின்னத்தின் கீழ் போட்டியிடுவதில் சிக்கல் நிலை தோன்றுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் செயலாளர் பதவி குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சியின் உயர்பீடம் இன்று கூடுகிறது.

எனினும், இச் சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலி ஆகியோர் கலந்துகொள்ளமாட்டார்கள் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.