அம்பாந்தோட்டை உடன்பாடு – முழு விபரங்களையும் அம்பலப்படுத்தக் கோருகிறது ஹெல உறுமய
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் செய்துள்ள புரிந்துணர்வு உடன்பாடு பற்றிய முழுமையாக தகவல்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய கோரியுள்ளது.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாணசபை உறுப்பினர் நிசாந்த சிறிவர்ணசிங்க,
“சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்படும் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்பாட்டின் விதிகள் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
ஒலுவில், காலி போன்ற துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு இந்த உடன்பாடு தடையாக இருக்குமா என்பது பற்றி அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும்.
அதைவிட, 100 மில்லியன் டொலர் தரகுப் பணம் கைமாறியிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அம்பாந்தோட்டையில் சீன நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள நிலம் தொடர்பாகவும் முரண்பாடான அறிக்கைகள் வெளியாகின்றன.
மிகப்பெரிய நாடான இந்தியாவில் உள்ள மிகப் பெரிய கைத்தொழில் வலயமான, மும்பை கைத்தொழில் வலயம் கூட, 7000 ஏக்கரில் தான் அமைந்துள்ளது. எதற்காக அம்பாந்தோட்டையில் கைத்தொழில் வலயத்துக்கு 15 ஆயிரம் ஏக்கர் ஒதுக்கப்படுகிறது என்று தெரியவில்லை.
இலங்கையில் உள்ள 14 கைத்தொழில் வலயங்களும், 3000 ஏக்கர் நிலத்தில் தான் அமைந்துள்ளன.
அரசியலுக்கு மட்டுமே நல்லாட்சி அல்ல. பொருளாதாரத் துறையிலும் நல்லாட்சி இருக்க வேண்டும். எந்தவொரு வர்த்தக அல்லது வேறு உடன்பாட்டையும் செய்து கொள்ளும் போது, வெளிப்படைத்தன்மை முக்கியம்.
பாரிய ஊழல்களினால் தான் ராஜபக்ச அரசாங்கத்தை மக்கள் வீட்டுக்கு அனுப்பினர்.
அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு தொடர்பான எல்லா விடயங்களையும் பகிரங்கப்படுத்தி தெளிவுபடுத்தாவிடின், தற்போதைய ஆட்சியாளர்கள் மீதும் அதே பழி விழும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.