Breaking News

முல்லைத்தீவில் நள்ளிரவு வரை நடைபெற்ற இளைஞர்கள் மீதான விசாரணை. ரவிகரன் கடும் கண்டனம்!

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் முல்லை.மாவட்ட இணைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்தி அன்ரனி செயநாதன் பீற்றர் இளஞ்செழியன் என்பவர் வழங்கிய அடிப்படை ஆதாரமற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் முல்லைத்தீவில் நள்ளிரவு வேளையில் மூன்று இளைஞர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார்.

தமிழர் தேசத்தின் இளைஞர்கள் மீதான அடக்குமுறை உயிர்ப்புடன் வைத்திருக்கப்படுகிறது என்பது நன்கு தெளிவாகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு,

நேற்றிரவு எட்டுப்பத்து மணியளவில் (08:10) எனக்கு அழைப்பொன்று வந்திருந்தது.

காவல் அலுவலர்கள் என கூறிக்கொண்டு இருவர் தன்னை முல்லைத்தீவு நகரில் உள்ள வீதியொன்றுக்கு வருமாறும் சந்திக்கவேண்டும் எனவும் கேட்டதாகவும் அதற்கு தான் இரவுநேரமாகையால் எதுவானாலும் நாளை காலை வருகிறேன் என்று கேட்க அதைமறுத்து இல்லை தற்போது தான் வரவேண்டும் என கேட்பதாகவும் தொலைபேசி வழியில் எனக்கு தெரிவித்தார்.

தனியே செல்லவேண்டாம் என அவருக்குக்கூறியதோடு சந்திக்க விரும்பின் எனது இல்லத்திற்கு அவர்களை வரச்சொல்லுங்கள் நீங்களும் இங்கு வாருங்கள் என பதிலளித்து அழைத்த இரு காவல் அலுவலர்களையும் எனது வீட்டுக்கு வரவழைத்திருந்தேன்.

வீட்டிற்கு வந்திருந்த காவல் அலுவலர்கள் இவ்விளைஞனை கட்டாயம் தற்போது காவல் நிலையத்திற்கு வருமாறு கூறவே இரவு நேரம் என்பதால் நானும் உடன் வருகின்றேன் எனக்கூறி அவ்விளைஞனோடு காவல் நிலையத்திற்கு சென்றிருந்தேன்.

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் முல்லை.மாவட்ட இணைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்தி அன்ரனி செயநாதன் பீற்றர் இளஞ்செழியன் என்பவர் வழங்கிய அடிப்படை ஆதாரமற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நான்கு இளைஞர்களுள் மூவர் நேற்றிரவு எட்டுமுப்பது மணியில் இருந்து பதினொன்றரை மணி வரையில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர்கள் மூவரையும் விசாரிக்கும் வரையில் காவல் நிலையத்தில் அவர்களுடன் நானும் இருந்தேன். விசாரிப்பின் நிறைவில் அவர்களிடம் கேட்டபோது, பிரதேச சபையின் அனுமதியின்றி பிரதேசசபைக்கு உரித்தான காணியில் அண்மையில் எழுப்பப்பட்ட சிலையானது வீழ்ந்திருப்பதற்கும் இவர்களுக்கும் தொடர்புள்ளதா என்ற வகையிலேயே தாம் விசாரிக்கப்பட்டதாக அவர்கள் கூறினார்கள். முல்லைத்தீவு நகரில் காந்தி சிலையை வைப்பதற்கு எதிராக சமூகவலைத்தளங்களில் இவர்கள் கருத்துகளை பதிவு செய்ததாகவும் அதனால் இவர்கள் தான் சிலையை வீழ்த்தியிருப்பார்கள் என சந்தேகிப்பதாகவும் முறைப்பாடு பதியப்பட்டிருப்பதாக தெரிவித்தார்கள்.

அனுமதியின்றி சிலை எழுப்பப்படுவது பொருத்தமற்றது எனவும் தமிழினம் சாராத-இம்மண்ணைச்சாராத ஒருவரின் சிலை முல்லைத்தீவின் நகர்ப்பகுதியில் தேவையற்றது என்ற பொருள்படும் நிலையில் தமது கருத்துகளை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்ததாகவும் சிலை வீழ்ச்சிக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை எனவும் அவர்கள் தமது பதில்களை வழங்கியதாக தெரிவித்தனர்.

வெறுமனே ஒரு முறைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு நள்ளிரவு வரை இளைஞர்களை விசாரித்தது மிகத்தவறான விடயம். ஒரு முறைப்பாட்டை ஆராயாமல் இவ்வாறு நடந்துகொண்டது மிகப்பிழை. ஒரு மனநோயாளி இதே போன்ற முறைப்பாட்டை வைத்தாலும் இவ்வாறு தான் தொடருமா?

இந்த முறைப்பாடு தனது அனுமதியுடன் தான் வழங்கப்பட்டதா என நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்கள் மக்கள் மன்றத்தில் தெளிவுபடுத்தவேண்டும். இல்லையெனில் தமிழ் இளையோரை நள்ளிரவு வரை விசாரிக்கும் முனைப்புக்கு அவரும் துணைபோயுள்ளார் என மக்கள் சந்தேகிக்கும் நிலை ஏற்படும்.

தமது கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கமுனையும் இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் இரவில் விசாரணைக்கு அழைப்பதையும் நள்ளிரவு வரை காவல் நிலையத்தில் வைத்திருப்பதையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன் என வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.