Breaking News

ட்ரம்ப் அரசின் அறிக்கை : இலங்கைக்கு பாதகமாக அமையுமென அச்சம்



கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்காவால் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் தொடர்பில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசு எதிர்வரும் பெப்ரவரி மாதம் தமது நிலைப்பாட்டை வெளியிடவுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான சர்வதேச விசாரணைகளிலிருந்து விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரி ஏற்கனவே அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இது குறித்த கலந்துரையாடுவதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளதாகவும் இதன் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாத பிற்பகுதியில் ஜனாதிபதி மைத்திரி அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முன்னைய அரசின் வெளிவிவகார கொள்கையை ட்ரம்ப் அரசு தவிர்த்து, முற்றிலும் மாறுபட்ட கொள்கையை பின்பற்றவுள்ளதால் இலங்கை குறித்த தீர்மானத்தை அமெரிக்கா மீள்பரிசீலனை செய்யுமென கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசு வெளியிடும் தீர்மானமானது தமிழ் மக்களுக்கு பாதகமாக அமையலாமென அச்சம் வெளியிடப்பட்டு வருகின்றது.