Breaking News

ஈழத் தமிழர்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இந்தியாவிற்கு சுற்றுலா வீசாவில் சென்ற போது கைதுசெய்யப்பட்ட ஈழத் தமிழர்களும் அகதி முகாமிலுள்ள ஈழத் தமிழர்களும் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி திருச்சி விசேட முகாமில் கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டுவந்த உணவுதவிர்ப்பு போராட்டம் தற்காலிகாக கைவிடப்பட்டுள்ளது.


உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த ஈழத் தமிழர்களுடன் மாவட்ட தனித்துணை ஆட்சியாளர் நடராயன் மற்றும் திருச்சி மாநகர சட்ட ஒழுங்கு துணை காவல் ஆணையாளர் வீ.மந்திரமூர்த்தி ஆகியோர் நேற்றிரவு நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாம் முன்வைத்த இரண்டு கோரிக்கைகள் குறித்து நேற்றிரவு கலந்துரையாடப்பட்டதாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத் தமிழர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் தமது விடுதலை தொடர்பாக சாத்தியமான பதிலை உயர்மட்டத்தில் இருந்து பெற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கப்பட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வழக்குகள் நிறைவடையும் வரை வேலைவாய்ப்பை பெற்றுத்தருமாறு தாம் கோரிக்கை முன்வைத்த கோரிக்கைக்கும் உறுதி வழங்கப்பட்டுள்ளதாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ஈழத் தமிழர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 23 ஆம் திகதி முதல் உணவு தவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ஈழத் தமிழர்களில் நடனசபாபதி பிரபாகரன் மற்றும் நாகராஜன் குணசீலன் ஆகிய இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த இருவரையும் பொலிஸார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது, தமது கோரிக்கை நிறைவேறும் வரை வைத்தியசாலைக்கு செல்ல மாட்டோம் என குறித்த இருவரும் கூறியிருந்தனர்.

இந்தியாவிற்கு ஆலய தரிசனத்திற்காக சென்றிருந்த போது, விடுதியொன்றில் தங்கியிருந்த தம்மை கியூ பிரிவு பொலிஸார் கைதுசெய்ததாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

விசாரணையொன்று உள்ளதாக தெரிவித்து கியூ பிரிவு பொலிஸார் தம்மை அழைத்துச் சென்றதாகவும், தம் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை அவர்கள் பதிவுசெய்துள்ளதாகவும் குறித்த ஈழத் தமிழர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மூவர் நீண்ட நாட்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு அகதிகளாக சென்றவர்கள் எனவும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடனசபாபதி பிரபாகரன், சுதாகரன் சுதர்சன், பேரின்பநாயகம் கோபிநாத், கிருஷ்ணபிள்ளை தயாகரன், உமாகாந்தன் குருவிந்தன், ஜெகதீபன் தர்ஷன், கந்தசாமி சத்தியசீலன், சகாயநாதன் ரொபின்பிரசாத், சிவசுப்ரமணியம் காந்தரூபன், நாகராஜன் குணசீலன், ரகுநாதன் யோககுமார் மற்றும் அருளின்பத்தேவர் ஆகியோரே இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.