Breaking News

மஹிந்த அரசாங்கத்தின் நிலையே மைத்திரி அரசாங்கத்திலும் நீடிக்கின்றது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்திலும் வீதியில் இறங்கி போராடியதாகவும், தற்போதும் அந்த நிலைமையே தொடர்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த நிலைமை தொடருமாக இருந்தால், தமிழ் மக்களின் இருப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், வடக்கு கிழக்கில் 67 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான காணிகளை இராணுவம் வைத்திருக்கின்ற நிலையில், 4000 ஏக்கர் காணியை அரசாங்கம் விடுவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சம்பூரில் 1200 ஏக்கர் வலிகாமத்தில் சிறியளவிலான காணி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மிகுதிக் காணிகள் விடுவிக்கப்டவில்லை என்பதே உண்மை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு வந்து இரண்டு வருடம் கடந்தும், அரசாங்கம் மாறி ஒரு வருடம் முடிந்து விட்ட போதிலும் இதுவரை தமிழ் மக்கள் முழுமையாக மீள்குடியேற முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

எனினும் கூட வரவு செலவு திட்டத்திற்கு தனது கட்சி உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சுக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டதையும் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனென்றால் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்தால் அரசியல் சாசன மாற்றம், தீர்வுத் திட்டங்கள் செய்ய முடியாமல் போய்விடும் என்பதால் நல்லெண்ணத்தை காட்ட முனைகின்றார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஒரு பக்கத்தில் இராணுவம் வெளியேற வேண்டும் என்றும் மறுபக்கத்தில் அந்த இராணுவம் இருப்பதற்காக பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பாரிய யுத்தத்திற்குள் தள்ளப்பட்டு மீண்டு வந்திருக்கின்ற மக்களை மேலும் மேலும் அடக்கி ஆழக்கூடிய நிலைக்கு தள்ளுகின்ற போக்கை காணக் கூடியதாகவுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இனவிகிதாசரத்தை குழப்புவது, திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுவது என்பவற்றில் முன்னைய மஹிந்த ராஜபக்ச அராசாங்கத்திற்கோ, தற்போதைய அரசாங்கத்திற்கோ எந்தவிதமான வித்தியாசங்களும் கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரே விதமான சிந்தனையில் தான் செயற்படுகிறார்கள் என்றும் இவை எல்லாவற்றையும் பார்கின்ற போது அரசாங்கம் தங்களுடைய திட்டங்களிலும், தங்களுடைய நடவடிக்கைகளிலும், கொள்கையிலும் சாரியாக உள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதாகவும் சுரேஸ் பிரேம சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றம் தமிழ் மக்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறது என கூறுகின்றார்கள் ஆனால் ஒரே ஒரு விடயமாக வெள்ளை வான் பயம் இல்லாமல் பேச முடிவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த காலத்திலும் வீதியில் இறங்கி போராடியதாகவும் தற்போதும் அதனையே தொடர்வதாகவும் சுரேஸ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமை தொடருமாக இருந்தால் தமிழ் மக்களின் இருப்பு என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளதாகவும் இறுதி நேரத்தில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எவ்வாறானதொரு முடிவை எடுக்கப் போகின்றார் என்றும் சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.