Breaking News

முன்னாள் போராளிகள் அடுத்தடுத்து மரணம்: விச ஊசி அச்சம் தீவிரம்



ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டும் சரணடைந்த நிலையிலும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு, விஷ ஊசி ஏற்றியிருக்கின்றார்கள் என்ற சந்தேகம் தொடர்ந்தும் வலுப்பெற்று வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா அச்சம் வெளியிட்டுள்ளார்.

புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்ட நிலையில், காய்ச்சல் காரணமாக திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த முன்னாள் போராளியான முல்லைத்தீவு – வற்றாப்பளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இராசதுரை திக்சனின் இறுதிக்கிரியையில் கலந்துகொண்டு அஞ்சலி உரை நிகழ்த்தியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார்.

போரின் இறுதிக்கட்டத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்து விடுதலை செய்யப்பட்ட முல்லைத்தீவு – வற்றாப்பளை பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளியான 26 வயதுடைய இராசதுரை திக்சன் கடந்த 12 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

சுகவீனம் காரணமாக திருகோணமலை - குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த முன்னாள் போராளி உயிரிழந்திருக்கின்றார்.

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த இவர், வெலிக்கந்தை - திருகோணமடு புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய இரண்டரை வருடங்கள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு, புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் 2012ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

அதன்பின்னர் அவரது குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் நிரந்தர தொழிலின்றி நாளாந்த கூலித்தொழிலில் ஈடுபட்டுவந்துள்ள இவர் திடீரென சுகயீனமுற்ற நிலையில், கடந்த 1 வாரகாலமாக காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 12 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த முன்னாள் போராளியின் இறுதிக்கிரியைகள் நேற்றையதினம் முல்லைத்தீவு - வற்றாப்பளையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

இதனைத்தொடர்ந்து பூதவுடல் வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அங்கு அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்ற நிலையில், பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டு வற்றாப்பளை இந்து மயானத்தில் தகனம்செய்யப்பட்டது.

இந்த இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா, முன்னாள் போராளிகளின் திடீர் மரணங்கள் பெரும் சந்தேகத்தை தோற்றுவித்து வருவதாக அச்சம் வெளியிட்டார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலேயே தமிழர் பகுதிகளில் வாழும் தாய்மாரின் நெஞ்சில் யுத்தம் கொளுந்துவிட்டு எரிவதாகவும் கவலை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ் மக்களது விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய முன்னாள் போராளிகள் இன்று அங்கவீனர்களாக ஆக்கப்பட்டுள்ளதுடன் சமூகத்தினால் கொச்சைப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவரும் கடந்த திங்கட்கிழமை திடீரென உயிரிழந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் குறுகிய காலம் உறுப்பினராக இருந்ததாக தெரிவித்து ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட இவர், புனர்வாழ்வு என்ற பெயரில் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு நான்கு வருடங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

புனர்வாழ்வின் போது முன்னாள் போராளி சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், சிகிச்சையளிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்த போதும் அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாலேயே அவர் உயிரிழந்திருப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த மற்றுமொரு முன்னாள் போராளியான தேவசகாயம் அமலதாஸின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரது மனைவி அமலதாஸ் நாகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் குடும்பத் தலைவனான தனது கணவனின் மரணத்தின் பின்னர் வாழ்வாதாரத்தைக் கொண்டுநடத்துவதில் பெரிதும் சிரமப்படுவதாகவும் 3 பெண் பிள்ளைகளின் தாயரான அமலதாஸ் நாகேஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான வவுனியா, புளியங்குளம் – பனிக்கநீராவி பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 46 வயதான எஸ்.அமலதாஸ் என்பவர் கடந்த செப்டெம்பர் மாதம் மூன்றாம் திகதி திடீரென மயக்கமுற்று விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத இருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்த அமலதாஸ், இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற 2009 ஆம் ஆண்டு மே மாத இறுதிப்பகுதியில் இடம்பெயர்ந்து சென்று வவுனியா - அருணாசலம் முகாமில் தஞ்சமடைந்திருந்த நிலையில் இராணுவத்திடம் சரணடைந்துள்ளார்.

இதற்கமைய வவுனியா – மருதமடு புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இதன்பின்னர் தனது குடும்பத்துடன் இணைந்து கூலித்தொழிலில் செய்து குடும்பத்தை பராமரித்து வந்த நிலையில் செப்டெம்பர் மாதம் மூன்றாம் திகதி, வேலைக்குச் சென்று மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்த போது திடீரென மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துவிட்டதாக அமலதாஸின் மனைவி நாகேஸ்வரி தெரிவிக்கின்றார்.

இதேவேளை மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் குறித்த முன்னாள் போராளியின் வீட்டுக்கு சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வன்னி அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான கே.கே.மஸ்தான், குறித்த குடும்பத்தினருக்கு ஒரு தொகை உதவிப்பொருட்களை வழங்கிவைத்ததுடன் முன்னாள் போராளியின் மரணத்தில் உள்ள குடும்பத்தினரின் சந்தேகங்களையும் கேட்டறிந்துள்ளார்.