தமிழ் மக்களுக்கு இறுதித் தீர்வு கிட்டும் வரை பிரித்தானியாவின் அழுத்தம் தொடரவேண்டும்
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதற்கான பிரித்தானியாவின் அழுத்தங்களை அரசாங்கம் ஏற்கனவே உணரத்தொடங்கியுள்ள நிலையில் இறுதித் தீர்வை தமிழ் மக்களுக்கு கிட்டும் வரை அவ்வகையான அழுத்தங்கள் தொடர வேண்டும் என பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் பிரித்தானிய பழைமைவாதக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுவின் தலைவருமான ஜேம்ஸ் பெர்ரியிடத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கும் பிரித்தானிய பழைமைவாதக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சிப்பாராளுமன்றக் குழுவின் தலைவருமான ஜேம்ஸ் பெர்ரி ஆகியோருக்கிடையில் பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற வளாகத்திலுள்ள போர்ட்கலிஸ் இல்லத்தில் திங்களன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் ரெலோ இயக்கத்தின் பிரித்தானியக் கிளையின் இணைப்பாளரான சாம்.சம்பந்தனும் பங்கேற்றிருந்தார்.
சந்திப்பு குறித்து செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவித்துள்ளதாவது,
முள்ளிவாய்க்கால் யுத்த முடிவின் பின், அப்போதைய இலங்கை அரசினால் எதிர்கொண்ட அரசியல் நெருக்குவாரத்தில் தளர்ந்துபோகாமல் தமிழ்த் தேசியத்தை தனித்துவமாக முன்வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் பேராதரவினை வழங்கி வட மாகாண சபைத் தேர்தலில் ஓர் அரசியல் ஆணையைக் கொடுத்தனர்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெருவெற்றியை அன்றைய இலங்கை அரசு கண்டுகொள்ளாத நிலையில், பொதுநலவாய நாடுகள் மாநாட்டுக்காக கொழும்பு வந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து எமது வட மாகாண சபை முதலமைச்சரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் பிரத்தியேகமாக சந்தித்ததன் பின்னரே மாநாட்டில் பங்கேற்றார். இதன் மூலம் அன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான அரசியல் செய்தியும் அழுத்தமும் இலங்கை அரசுக்கு கொடுக்கப்பட்டதை நினைவுகூர்ந்ததுடன் அதற்கு பழைமைவாதக் கட்சிக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவிக்க கடைமைப்பட்டுள்ளேன்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர்களில் இலங்கை அரச படைகளினால் புரியப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் குறித்து தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரித்தானிய வெளியுறவுக் கொள்கைக்கும் அக்கொள்கையின் பின்புலமாக இருக்கும் பிரித்தானிய பாராளுமன்றத்துக்கும் பிரித்தானிய மக்களின் உயர்ந்த மனித உரிமை விழுமியங்களுக்கும் நன்றி கூறினேன்.
அத்தோடு மனித உரிமைகள் குறித்த கரிசனைகளால் 2010ஆம் ஆண்டு அன்றைய இலங்கை அரசாங்க காலத்தில் நிறுத்தப்பட்ட ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை தற்போதைய தேசிய அரசாங்கம் மீளப்பெறுகின்ற கட்டத்தை நெருங்கிவருகின்றது.மறுபக்கத்தில் இலங்கையின் நீண்ட கால தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பு மாற்றத்துக்கு ஊடாக ஓர் அரசியல் தீர்வை காண்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயன்று வருகின்றது.
இவ்விரு சூழல்களையும் சமாந்தரமாக வினைத்திறனுடன் கையாளக்கூடிய சிறப்பான ஒரு இராஜதந்திர அணுகுமுறை இருப்பதோடு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு சாத்தியமாக்கப்பட வேண்டும்.
அதற்காக பிரித்தானியாவின் அழுத்தங் களை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே உணரத்தொடங்கி விட்டது. இறுதித்தீர்வை தமிழ் மக்கள் கிட்டும் வரை அவ்வகையான அழுத்தங்கள் தொடர வேண்டும் என்றார்.