Breaking News

தபால் சேவைகள் முற்றாக முடக்கம்



நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள தபால் ஊழியர்களது பணிப்பகிஸ்கரிப்பின் காரணமாக, தபால் சேவைகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்டத்திலும் தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், தபால் விநியோகம் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு உட்பட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து தபால் நிலைய ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள தபால் பணியாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வேண்டும், ஊழியர் நியமனத்தில் தேவையற்ற தலையீடுகளை நிறுத்தல், உப தபாலகங்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்பன உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக வவுனியா மாவட்டத்திலும் தபால் நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தபால் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

தபால் சேவையாளர்களின் கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்திருந்தது.

தபால் சேவையாளர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, அமைச்சர் எம்.எம்.அப்துல் ஹலீம் பணியார்களது பிரச்சனைக்கு உரிய தீர்வை வழங்காததால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அந்த ஒன்றியத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்திருந்தார்.

இதேவேளை இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள தபால் மற்றும் தபால் அஞ்சல் நிலையங்களில் சேவைகள் முடங்கும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.