Breaking News

முதலமைச்சர்களை இன்று சந்திக்கிறார் பிரதமர்



பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள அபிவிருத்தி (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் குறித்து கலந்தாலோசனை செய்வதற்காக, அனைத்து மாகாண முதலமைச்சர்களையும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சந்திக்கவுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஒன்பது மாகாண முதலமைச்சர்களையும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க சிறிலங்கா பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அபிவிருத்திக்கான சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மாகாண சபையின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் இந்தச் சட்டமூலம் அமைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தச் சட்டமூலத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமை தாங்கும் 7 மாகாண சபைகள் நிராகரித்துள்ளதாக, மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்தார்.

அதேவேளை, இந்தச் சட்டமூலத்துக்கு வடக்கு மாகாணசபையும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது அரசியலமைப்பை மீறுவதாக உள்ளது என்று வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்று ஊவா மாகாணசபையில் இந்த சட்டமூலம் பெரும்பான்மை உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலத்தை வரும் பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அனைத்துலக வர்த்தக, அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்துக்கு மாகாணசபையின் ஒப்புதல் அவசியம் என்பதாலேயே மாகாண முதலமைச்சர்களை சிறிலங்கா பிரதமர் இன்று சந்திக்கவுள்ளார்.