மக்கள் சேவையை திறம்பட செய்வோம் -விக்கி
நாட்டில் உள்ள ஏனைய மாகாண சபைகளை விட வடக்கு மாகாண சபை தாமதமாக தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், குறுகிய காலத்திற்குள் பல வெற்றிகளை கண்டுள்ளது.
மக்கள் எமக்கு சம்பளம் வழங்குகின்றனர். எனவே அவர்கள் தேவைகளை அடுத்த வருடம் இன்னும் அதிகளவில் நிறைவேற்றுவோம் என நாம் அனைவரும் திடசங்கற்பம் கொள்வோம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மாகாண சபை உறுப்பினர்களிடமும், அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் இந்த வருட நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணம் யூ.எஸ் ஹோட்டலில் மதிய உணவு விருந்துபசாரம் ஒன்று நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஹோட்டல் பல கூட்டங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் பிரசித்தி பெற்றதாகும். அது தொடர்பில் நான் இங்கு பேசவில்லை. தற்போது எல்லாவற்றையும் மறந்து நாம் அனைவரும் ஒன்று கூடியுள்ளோம். இதே போன்று ஒருநாள் எம்மனைவரிடையேயும் ஒற்றுமை ஏற்படும். ஏனைய மாகாண சபைகள் போன்றல்லாது எமது மாகாண சபை குறுகிய காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டது. அதே குறுகிய காலத்திற்குள் எமது மாகாண சபையை செயற்திறன் மிக்கதாக மாற்ற வேண்டும். பல விடயங்களில் நாம் சற்று தாமதப்பட்டாலும் செயற்பாடுகள் தற்போது விரைவாக நடைபெறுகின்றன.
எதிர்வரும் வருடத்தில் எல்லாவற்றையும் மறந்து நாம் அனைவரும் அதிகாரிகள் உட்பட அனைவருடனும் சிறப்பாக செயற்படுவோம் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. மக்கள் எமது வேலைக்காக அவர்களது வரிப் பணத்தில் சம்பளம் தருகின்றனர். எனவே அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு எமக்கு உண்டு. அந்த மக்களுக்கான சேவைகளை அடுத்த வருடம் இன்றும் திறம்பட செய்வோம் என தனது உரையில் முதலமைச்சர் கூறியிருந்தார்.