தென்னிலங்கைக்கு உரிமைகள் கோரும்,எம்.ஏ.சுமந்திரன்.
பௌத்த மதத்திற்கு எதிரான தீர்மானம் எதுவும் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்படவில்லை. அப்படியிருக்க, வடக்கு மாகாண சபைக்கு எதிராக தென்னிலங்கையில் பொய்ப்பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“பௌத்த மதத்திற்கு எதிரான தீர்மானம் எதுவும் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்படவில்லை. எந்தவொரு மதத்தைச்சார்ந்த கட்டடங்களும் அனாவசியமான முறையில் அமைக்கப்படக்கூடாது என்ற பிரேரணையே அங்கு நிறைவேற்றப்பட்டது” என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதை நாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை. எனினும், எண்ணிக்கையி்ல் சிறுபான்மையாக உள்ளவர்களுக்கு நாட்டில் சமமான உரிமை உள்ளது என்ற விடயத்தை பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் தமது மக்கள் மத்தியில் கொண்டு போய்சேர்க்கவேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற விவாதமொன்றிலேயே அவர் இவற்றைத் தெரிவித்துள்ளார்.
எம்.ஏ.சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் பெளத்த மதத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்படவிருப்பதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் பௌத்தத்தி்ற்கான முக்கியத்துவத்தை குறைக்கவே இல்லை என நாம் கூறியுள்ளோம். இருந்தாலும் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் இனங்களின் உரிமைகள் சமமாக வழங்கப்படவேண்டும்.
இலங்கையில் உள்ள சிறுபான்மையினருக்கும் உரிமைகள் உள்ளன. இதை தலைவர்கள் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் ஆனால் இதைச்செய்ய அஞ்சுகின்றனர். அரசியலமைப்பை தயாரிப்பதற்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை இழந்துவிடக்கூடாது என்பதை சகலரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.” என்றுள்ளார்.