Breaking News

பாகிஸ்தானினை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி



சார்ஜாவில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுக்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.

முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 281 ஓட்டங்களையும், மேற்கிந்திய தீவுகள் 337 ஓட்டங்களையும் எடுத்தன. இரண்டாம் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய பாகிஸ்தான் அணி நான்காம் நாள் ஆட்டத்தின்போது 208 ஓட்டங்களுடன் சுருண்டது. இதனால், மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு 153 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

குறித்த எளிய இலக்குடன் இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் துவக்க வீரர் பிராத்வெயிட் நிதானமாக விளையாடினார். மறுமுனையில் சீரான இடைவெளியில் 5 வீரர்கள் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் பிராத்வெயிட்டுடன் டோரிச் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஆட்டத்தின்போக்கு மேற்கிந்திய தீவுகளுக்கு சாதகமாக திரும்பியது.

ஆட்ட நேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 114 ஓட்டங்களை எடுத்திருந்தது. பிராத்வெயிட் 44 ஓட்டங்களுடன், டோரிச் 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றிக்கு 36 ஓட்டங்களே தேவை என்ற நிலையில், தொடர்ந்து ஆடிய பிராத்வெயிட், டோரிச் இருவரும் தலா 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் வெற்றி இலக்கை எட்டினர். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கெப்டன் ஹோல்டர் தலைமையில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. பிராத்வெயிட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதால், 2-1 என தொடரை கைப்பற்றியுள்ளது. 21 விக்கெட்டுகள் கைப்பற்றிய யாசிர் ஷா தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.