Breaking News

புலிகளைத் தோற்கடிக்க உதவிய குடியரசுக் கட்சி மீண்டும் ஆட்சியில் – மகிழ்ச்சியில் மகிந்த

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க உதவிய குடியரசுக் கட்சி மீண்டும் அமெரிக்காவில் பதவிக்கு வந்திருப்பதையிட்டு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.


அமெரிக்க அதிபராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, டொனால்ட் ட்ரம்ப்புக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

“ உங்களின் ஆட்சியில் எல்லா நாடுகளின் இறைமைச் சமத்துவக் கொள்கையின் அடிப்படையிலும், தேசிய அரசுகளின் உள்விவகாரங்களில் தலையிடாத வகையிலும் புதிய உலக ஒழுங்கு ஒன்றை உருவாக்குவதற்கு நாம் எதிர்பார்க்கிறோம்.

முன்னைய குடியரசுக் கட்சி நிர்வாகம், வழங்கிய இராஜதந்திர மற்றும் புலனாய்வு ஒத்துழைப்புகள், எனது அரசாங்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடிக்க உதவியாக இருந்தது என்பதை நன்றியுடன் நினைவுபடுத்துகிறேன்.

உங்களது ஆட்சிக்காலத்தில் எல்லா வெற்றிகளையும் பெறுவதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், டொனால்ட் ட்ரம்புக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர்.

இந்த வாழ்த்துச் செய்திகளில், சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள ஆழமான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்பவதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.