வடக்கு முதல்வரின் கருத்தை நிராகரித்தார் குரே (காணொளி இணைப்பு)
நாட்டின் தேசியப் பாதுகாப்பை கருத்திற்கொண்டு வடக்கில் தொடர்ந்தும் இராணுவம் நிலைகொண்டிருக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ள வட மாகாண ஆளுநர், வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டால் தெற்கிலுள்ள இராணுவ முகாம்களும் அகற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த வட மாகாண ஆளுநர், யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஏழரை ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் தொடர்ந்தும் வடக்கு, கிழக்கில் அதிகளவில் நிலைகொண்டுள்ள படையினரை அகற்ற வேண்டும் என்று தமிழர் தரப்பால் தொடர்ச்சியாக விடுக்கப்படும் கோரிக்கை நியாயமற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
“இராணுவ முகாம்கள் நாட்டில் இருக்க வேண்டியது அவசியம். அவை பொது மக்களின் வீடுகளிலும், தனியார் காணிகளிலும் காணப்படக்கூடாது. இராணுவ முகாம்களின் உருவாக்கத்தைப் பாருங்கள். இந்த காணிகளை எமது இராணுவமா கைப்பற்றியது? இல்லை. பயங்காவாரம் இடம்பெற்ற காலப்பகுதியில் இந்தக் காணிகள் கைமாறப்பட்டன. புளொட், ஹீரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகள் காணப்பட்டன.
போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இந்த இயக்கங்கள் மக்களின் காணிகளிடையே நின்றும், அரண்களில் இருந்தும் தாக்குதல்களை நடத்தினார்கள். தென்மாகாணத்தில் கரையோரப் பகுதிகளை போர்த்துக்கேயர்களே முதலில் கைப்பற்றினார்கள். அதன் பின்னர் ஒல்லாந்தரும், அதற்கடுத்து பிரித்தானியரும் கைப்பற்றினர்.
ஆனால் அந்த இடம் யாருடையது? போர்த்துக்கேயரிடம் இருந்தே இந்த காணிகளைப் பெற்றோம் என ஒல்லாந்தருக்கு கூற முடியாது. அதேபோலதான் பிரித்தானியரும். போரின் இறுதியாக இந்தக் காணிகள் இராணுவத்தினரே கைப்பற்றினர். மாறாக இராணுவம் ஒவ்வொருவருடைய வீடுகளிலும் சென்று தங்கவில்லை.
விடுதலைப் புலிகள் சில சந்தர்ப்பங்களில் அரண்களில் அல்லாமல் மக்களது வீடுகளுக்கு இடையே நின்றே தாக்குதல்களை நடத்தியதோடு மக்களின் காணிகளை இயக்கமே கைப்பற்றியிருந்தது. போரின் பின் அவை ஒவ்வொன்றான இராணுவம் கைப்பற்றியிருப்பதோடு அவற்றை உரிமையாளர்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அவர்களது காணிகள், வீடுகளை மீள வழங்குவதன் அர்த்தம் இராணுவ முகாம்களை அகற்றுவது அல்ல.
வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவதாயின் தெற்கிலும் முகாம்கள் அகற்றப்பட வேண்டும். எனினும் வடக்கிலும், தெற்கிலும் இராணுவ முகாம்கள் இருந்தே தீர வேண்டும். தேசிய பாதுகாப்பு, தேசிய இறைமைக்கு இராணுவ முகாம்கள் காணப்படுவது அவசியம் என்றே அரசாங்கத்தின் கொள்கை. அத்துடன் இந்தியாவிலிருந்து கேரளா கஞ்சா கடல் மார்க்கமாகவே வடக்கிற்கு கடத்தப்படுகிறது. இந்த நிலையில் அவற்றை தடுப்பதற்கு கடற்படை அங்கு இருக்க வேண்டும். - என்றார்.
புனர்வாழ்வு முகாம்களில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து வடமாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்த கருத்துக்களையும் கடுமையாக விமர்சித்த வட மாகாண ஆளுநர், முதலமைச்சர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
“புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் அண்மையில் கூறியிருந்தார். இப்போது எங்கே அந்த பேச்சுக்கள்? முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகவும், அவர்கள் உயிரிழப்பதாகவும் வட மாகாண முதலமைச்சர் கூறியிருந்தார். இந்த அறிவிப்பின் ஊடாக தமிழ் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர்.
எனினும் இதுவரை அந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டவே இல்லை. மக்கள் தலைவர் ஒருவர் அறிவிப்பொன்றை விடுக்கும்போது ஆழமாக சிந்தித்து மிகவும் பொறுப்புடன் அறிவிப்புக்களை விடுக்க வேண்டும். முழு நாட்டு மக்களையும் மனதில் வைத்தே அறிவிப்புக்களை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, தமிழ் இளைஞர்கள் உட்பட முழு சந்ததியினரையும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்வதற்காக திட்டமிடப்பட்ட சதியொன்று முன்னெடுப்பதாகவும் வடக்கு முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
போதை வஸ்து பயன்பாடு, தாக்குதல் கும்பல் ஊடாக அரசாங்கத்தினால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். எவராலும் இவ்வாறான கருத்துக்களை முன்வைக்க முடியும். ஆனால் உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் தான் அவர்களிடம் இல்லை” - என்றார்.