3-வது தாக்குதலை தடுத்ததால் உயிர் பிழைத்தேன் - மாவை
மூன்றாம் முறை மேற்கொண்ட தாக்குதலை தடுத்த காரணத்தால் தான் உயிர் பிழைத்தேன் என பாராளு மன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சோ.சேனாதிராஜா நீதிமன்றில் சாட்சியம் அளிக்கும் போது தெரிவித்தார்.
ஊர்காவற்றுறை பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கின் சாட்சியங்களுக்கான பதிவு விசாரணை 6 ஆம் நாளாக யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நேற்றைய தினம் யாழ் மேல் நீதிமன்றில் நடைபெற்றது.
அந்த வழக்கில் கண்கண்ட சாட்சியங்களில் (7ஆவது சாட்சி) ஒருவரான மன்றில் ஆஜராகி சாட்சியம் அளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,
தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 2011 ஆம் ஆண்;டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி, எமது 11 வாகனங்களில் 40 பேர் வரையில் ஊர்காவற்றுறை நோக்கி சென்றோம். எமது வாகன தொடரணியில் சிவாஜிலிங்கம் பய ணித்த வாகனம் முதலாவதாகவும் , எமது கார் நான்காவதாகவும் சென்று கொண்டிருந்தது.
தம்பாட்டி பகுதியில் சென்ற போது சிவாஜியின் வாகனம் ஒரு குழுவினரால் தாக்கப்ப ட்டுக்கொண்டிருந்ததை அவதானித்தேன். நெப்போலியன் என்பவர் தாக்குதலுக்கு வழி காட்டியாக நடந்து கொண்டிருந்ததை அவதானித்தேன். துப்பாக்கி வேட்டுக்கள் கேட்டன. ஆனால் துப்பாக்கியால் எவரையும் சுட்டதை நான் காணவிலலை. எமக்கு முன்னால் நின்ற வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
சிவாஜியை இழுத்துக்கொண்டு போகிறார்கள் என எனது மெய்பாதுகாவலரால் எனக்கு தெரிவிக்கப்பட்டது.எனவே தாக்குதல் நடந்த இடத்துக்கு பேசுவதற்காக இறங்கினேன்.
அப்போது நெப்போலியன் என்பவர், மாவை சேனாதிராசாவை தாக்குங்கள் என சொன்னதை நான் கேட்டேன், அப்போது எனது வாகன கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. 3 பேர் எமது வாகனத்துக்கு அருகில் வந்தார்கள். ஜீவன் என்பவர் இரும்புக்கம்பியால் என்னை தாக்கினார். தலையில் நெற்றி ப்பகுதியில் மிக மோசமாக அடிபட்டிருந்தது. கண்ணை மறைத்து இரத்தம் உடல் முழுவதும் வழிந்தோடிக்கொண்டிருந்தது.
நான் நிலை தடுமாறியிருந்தேன். இரண்டாம் முறை அடித்தபோது தப்பிக்க முயற்சித்தேன், மூன்றாம் முறையும் தாக்க முற்பட்ட போது இடது கையினால் அதை தடுத்த காரணத்தினால் உயிருடன் தப்பினேன்.
எனது தலையின் முன்பக்கம், இடது கை, தோளில் காயம் ஏற்பட்டது. எனது மெய் பாதுகாவலருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவர்கள் என்னை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்தார்கள். எனது மெய்பாதுகாவலரிடம் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டாம் என்று முன்பே கூறியிருந்தேன். அதனால் அவர்கள் அதை பயன்படுத்தவில்லை. தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு அருகில் கடற்படை காவலரண் இருந்தது கடற்படையினர் நின்றிருந்தனர்.
என்னை ரவிராஜின் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி வந்தார்கள். அப்போது ஏரம்பு பேரம்பலத்ததை அதே வாகனத்தில் ஏற்றினார்கள். அவர் மிக மோசமாக தாக்கப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக ஏதாவது கூற விரும்புகிறீர்களா என நீதிபதியால் கேட்கப்பட்ட போது ஆம் என பதிலளித்த மாவை சேனாதிராசா, அந்த நாளை என்னால் மறக்க முடியாது.
ஏன் தாக்கப்பட்டோம் என்பதற்கான நியாயமான காரணம் இதுவரை தெரியாது. தாக்குதலில் ஈடுபட்டவர்களிடம் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா என தெரியாது, ஆனால் குறித்த தாக்குதலுக்கு ஒரு பின்னணி இருந்தது என்பதை எங்களால் அறிய முடிந்தது. இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இது திட்மிட்ட கொலை முயற்சியும் சதி முயற்சியும் ஆகும். விசாரணைகள் சரியாக இடம்பெற்றால் குற்றவாளிகளை இனங்காண முடியும்.
கைது செய்யப்பட்டவர்கள் குறுகிய காலத்திலேயே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். கொலை குற்றத்துக்கு எப்படி பிணை கிடைத்தது. என வெளியில் கேட்கிறார்கள் நீதவானின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு தான் பிணை வழங்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட முதலாம் எதிரியான நெப்போலியனை எனக்கு முன்னரே தெரியும். அவர் குறித்த சம்பவத்தை வழிநடத்தியிருந்தார். அந்த சம்பவம் சதி முயற்சி. ஆகவே முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து எதிர்த்தரப்பு சட்டத் தரணி முடியப்பு றெமீடியாசினால் மாவை சேனாதிராசாவிடம் 2 மணித்தியாலங்கள் வரையில் குறுக்கு விசாரணை இடம்பெற்றது.