Breaking News

தமிழ் மக்கள் புலிகளின் தலைவரை மீண்டும் எதிர்பார்க்கின்றார்களா?

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீண்டும் எதிர்பார்க்கின்றார்களா என ஜாதிக ஹெல உறுமய கேள்வி எழுப்பியுள்ளது.


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதன் மூலமும், மாவீரர் தினைத்தை நினைவு கூருவதன் மூலமும் வடக்கின் தமிழ் மக்கள் சொல்ல நினைப்பது என்ன? என்றும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தில் உயிர்நீத்த மக்களை வடக்கில் நினைவுகூருவதற்க சகல மக்களுக்கும் உரிமை உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதனை மே மாதம் 17 ஆம் 18 ஆம் மற்றும் 19 ஆம் திகதிகளில் அனுஷ்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் இயங்கிய காலத்தில் பிரபாகரனின் அறிவிப்பின் பிரகாரம் கொண்டுவரப்பட்ட மாவீரர் தினத்தில், தமிழ் மக்கள் தமது உறவுகளை அஷ்டிக்கக்கூடாது என்றும் அவர் எசச்ரிக்கை விடுத்துள்ளார்.  

மூன்று தசாப்த காலம் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி, சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரதும் உயிர்களைப் பறித்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டதாகவும் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இது இலங்கையின் ஒரு கறுப்பு தினமாகவே கருதப்படுவதாகவும் பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் மூலம் இந்த நாடு சந்திக்க நேர்ந்த இழப்புக்களை இன்று வரையில் ஈடுகொடுக்க முடியாது உள்ளதாகவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் அமைதியையும் நட்புறவையும் இந்த நாடு இழக்கவும் இவர்கள் காரணமானவர்கள் என்றும் அவ்வாறான நபர்களை அனுஷ்டிப்பது மிகவும் மோசமான ஒரு விடயமாகவே கருதப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.  

வடக்கில் கடந்த காலத்தில் இருந்து ஒரு சிலர் தொடர்ச்சியாக மாவீரர் தினத்தை அனுஷ்டித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர்,

அரசியல்வாதிகள் தமது அரசியல் நோக்கத்துக்காக இவ்வாறு செயற்பட்ட போதிலும், யாழ். பல்கலைக்கழக மாகணவர்களும் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது வருத்தத்தக்க விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.

இளம் சமூதாயம் இன்றும் இனவாத, பிரிவினைவாத, கொள்கையில் பயிற்றுவிக்கப்படுவதும், அவர்கள் மூலம் வடக்கின் பிரிவினைவாதக் கொள்கைகள் பலப்படுத்துவதும் நாட்டின் பயணத்தின் சரியான ஒன்றாக அமையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செயற்பாடுகள் மூலம் நாட்டில் மீண்டும் ஒரு குழப்பகரமான சூழல் உருவாக்கப்படவும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தமிழ் மக்கள் புத்திசாலித்தனமாக அரசியல் பாதையைத் தெரிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.