மனோகணேசனின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார் சிவாஜிலிங்கம்
தமிழர்களின் தேசிய போராட்டத்தையும், தேசிய இயகத்தையும் கொச்சைப்படுத்தவேண்டாமென தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசனிடம் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில், தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் எனவும், மாவீரர் தினம் அனுட்டிப்பவர்கள் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.
மனோகணேசனின் இக்கருத்துக்கு பதிலளித்த சிவாஜிலிங்கம்,
2002 ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரன் அனைத்து தமிழ் கட்சிகளையும் அழைத்துப் பேசிய போது, திருப்தியான பல கருத்துக்களை முன்வைத்து அறிக்கை ஒன்றினை மனோ கணேசன் வெளியிட்டிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து பல விடயங்களை செய்வோம் என கூறியதுடன், அன்று பயங்கரவாதிகள் என தெரியாத போது இன்று பயங்கரவாதிகள் எனத் தெரிகின்றதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் , உங்களின் கட்சியின் சின்னம் ஏணிச் சின்னம் ஏணியில் ஏறி யானையில் ஏறினீர்கள். இன்று ஏறி வந்த ஏணியை தட்டி விழுத்துகின்றீர்கள் என்பதே மிகக்கவலையான விடயம். அந்த ஏணியாக வடகிழக்கு மக்களும் இருந்தார்கள். மலையக மக்களையும் தயவு செய்து புறக்கணிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
உங்களுக்கு அமைச்சு பதவி வேண்டுமென்றால், தாராளமாக குளிர்காயலாம், அல்லது ஒட்டிக்கொண்டிருக்கலாம். எமது மக்களிடம் வந்து விட்டு, எமது தேசிய போராட்டத்தினையும், தேசிய இயக்கத்தினையும் கொச்சைப்படுத்த வேண்டாம். எந்த சக்தி வந்தாலும் தலை வணங்கப் போவதில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பலர் நினைவு கூர்ந்து நிலைமையினை புரிய வைத்துள்ளார்கள் அவற்றினை நன்குபுரிந்துகொள்ள வேண்டுமென்றும் அவர் என்றும் வலியுறுத்தியுள்ளார்.