Breaking News

‘ஐ.எஸ்’ அமைப்பு குறித்து ‘றோ’ எச்சரிக்கவில்லை- பாதுகாப்புச் செயலர்

இலங்கையர்கள் இஸ்லாமிய தேசம் எனப்படும் ‘ஐஎஸ்’ அமைப்பில் இணைந்து கொண்டமை தொடர்பாக, இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘றோ’ எந்த எச்சரிக்கை அறிக்கையையும் வழங்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.


கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து இது குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி,

“சிரியாவிலோ, ஈராக்கிலோ செயற்படும் ‘ஐஎஸ்’ அமைப்பில் இலங்கையர்கள் இணைந்து கொண்டமை தொடர்பான எந்த தகவலையும் ‘றோ’ வழங்கவில்லை.

இருந்தாலும், ‘ஐஎஸ்’ அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பாக, சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள் அதிகபட்ச விழிப்பு நிலையில் இருக்கின்றன” என்று குறிப்பிட்டார்.

சிறிலங்காவைச் சேர்ந்த நன்கு படித்த குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர், ‘ஐஎஸ்’ அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக அண்மையில் சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தகவல் வெளியிட்டிருந்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு சிறிலங்கா முஸ்லிம்கள் பலத்தை எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.