Breaking News

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், டொனால்ட் ட்ரம்புக்கும் ஹிலாரி கிளின்டனுக்கும் இடையில் கடுமையான இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.


இருவரும் மாறி மாறி முன்னிலை வகிப்பதும், பின்னடைவைச் சந்திப்பதுமாக உள்ளனர். எனினும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், சற்று கூடுதல் தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

பிந்திய நிலவரங்களின்படி குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 232 தேர்தல் கல்லூரி வாக்குகளையும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் 209 தேர்தல் கல்லூரி வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இன்னமும் 97 தேர்தல் கல்லூரி வாக்குகளுக்கான முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளது.

தற்போது வரையில் டொனால்ட் ட்ரம்புக்கு, 4,54,43,549 வாக்குகள் (49 வீதம்) கிடைத்துள்ளன. ஹிலாரி கிளின்டனுக்கு 4,32,90,849 வாக்குகளும் ( 47 வீதம்) கிடைத்துள்ளன.

அதேவேளை, அமெரிக்க செனட் சபைத் தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் வெளியாகியுள்ள நிலையில் குடியரசுக் கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

செனட் சபையின் 100 இடங்களில், இதுவரையில் 93 முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இதில், குடியரசுக் கட்சி 47 இடங்களையும், ஜனநாயக கட்சி 46 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. செனட் சபையில் பெரும்பான்மை பெறுவதற்கு இருகட்சிகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

அமெரிக்க நாடாளுமன்றமான பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 435 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில், இதுவரையில் வெளியான முடிவுகளின் படி 189 ஆசனங்களைப் பெற்று குடியரசுக் கட்சி முன்னிலையில் உள்ளது.

இங்கு அறுதிப் பெரும்பான்மை பலம் பெற குடியரசுக் கட்சிக்கு இன்னும் 29 ஆசனங்களே தேவையாக உள்ளன. அதேவேளை ஜனநாயக கட்சி 133 ஆசனங்களுடன் பின்தங்கியுள்ளது.