ஆவா' குழுவின் பின்னணியில் இராணுவமா?- முதலமைச்சர் சந்தேகம்
வடக்கில் தற்போது ஒரு இலட்சம் இராணுவம் பாதுகாப்புக் கடமையில் உள்ள நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்படாத வன்முறை குற்றச் சம்பவங்களும் மிக பாரியளவிலான போதைப் பொருள் பாவனையும் அதிகரித்துள்ளமையானது எப்படியென்ற கேள்வியை ஏற்படுத்துவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பதற்றத்தை உண்டாக்கியிருக்கும் வாள்வெட்டுக் குழுக்களின் நடமாட்டம் மற்றும் அதிகரித்த போதை பொருள் பாவனை ஆகியன குறித்து நேற்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்
தார். இந்நிலையில் இது விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கும் 'ஆவா' குழு யார்? என்ற உண்மைத் தகவல் யாருக்கும் தெரியவில்லை. முன்னர் இராணுவமே 'ஆவா' குழு என கூறப்பட்டது. பின்னர் அந்த குழுவை தொடக்கியதும், அவர்களை வழிநடத்திக் கொண்டிருப்பதும் இராணுவமே என கூறப்படுகின்றது. எனவே இது விடயம் தொடர்பாக தீவிரமாக ஆராயப்படவேண்டும். அதுவரை 'ஆவா' குழுவின் பின்னணியில் அவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் பேசுவதற்கு நான் விரும்பவில்லை.
ஆனால் ஒரு வேண்டாத குழுவினரே பல வேண்டாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். அதனை தடுக்க இயலாத நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என்பதுவே உண்மையாகும். அந்தவகையில் நான் ஒரு விடயத்தை கேட்க விரும்புகிறேன் அதாவது கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் இப்போதுள்ள நிலைபோன்ற மிகமோசமான வன்முறை குற்றச்செயல்கள் நடந்திருக்கவில்லை. மிக மோசமான பயங்கரமான போதைப்பொருட்களின் பாவனை இருந்திருக்கவில்லை. ஆனால் இவை எல்லாம் இப்போது நடக்கின்றது.
இத்தகைய சூழலில் தமிழ் மக்களின் பாதுகாப்புக்காகவே நாங்கள் இருக்கிறோம். என கூறிக்கொண்டு வடக்கில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் எப்படி நடக்கின்றன என்ற கேள்வியை எழுப்புவதுடன் இந்த விடயமானது எமக்கு கடும் விசனத்தையும், வியப்பையும் கொடுத்திருக்கின்றது.
'ஆவா' குழுவின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? யார் வழி நடத்துகிறார்கள்? என்பதெல்லாம் எமக்கு தெரியாத விடயம். எமக்கு தெரிந்த விடயங்கள் இப்படி மிகமோசமான குற்றசெயல்கள் நடக்கின்றன. என்பது மட்டுமேயாகும். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக சகல விபரங்களையும் எமக்கு தாருங்கள். என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவை கேட்டிருக்கின்றேன். அந்த விபரங்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் நான் ஊடகங்களுடன் நிச்சயமாக பேசுவேன் என்றார்.