2017 ஆம் ஆண்டுக்காக வரவு – செலவுத் திட்டமும் வரிச் சலுகைகளும்
எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டத்தில் புகையிலை மற்றும் மதுபானங்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளதுடன் முதலீட்டாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு வரிச் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் பீடி இலை இறக்குமதியாளர்களுக்கு வருடாந்த அனுமதிப் பத்திர கட்டணமாக 5 மில்லியன் ரூபா விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அருந்தத்தகாத மதுசாரம் மீது லீற்றர் ஒன்றுக்கு 25 ரூபா சுங்கத் தீர்வை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் அருந்தத்தகு மதுசாரம் லீற்றர் ஒன்றுக்கு 800 ரூபா சுங்கத்தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு லெவி வரியானது 25 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாகன இறக்குமதி மீது பொருளாதார சேவைக் கட்டண முற்கொடுப்பனவு நிறுத்திவைத்தல் வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதலீட்டு ஊடக்குவிப்புக்காக குறைந்தபட்சம் 250 பேருக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கும் 3 மில்லியன் டொலருக்கு குறையாத முதலீட்டின் மீது 100 வீத மூலதன விடுதொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முதலீடு ஒன்று வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படுமாயின் 200 வீத மூலதன விடுதொகை வழங்கப்படும்.
பந்தயம் மற்றும் சூதாட்டம், மதுபானம் மற்றும் புகையிலை வருமானங்கள் மீது 40 வீதமான உயர் வருமான வரி பிரயோகிக்கப்படும். வங்கி, நிதி, காப்புறுதி, நிதிக் குத்தகை உள்ளடங்கலான ஏனைய துறைகளின் இலாபம் மற்றும் வருமானம் மீது 28 வீத வரி அறவிடப்படும்.
தற்போது நடைமுறையில் உள்ள வருடாந்த ஒளியலைக் கட்டணமானது 25 வீதத்தினால் அதிகரிக்கப்படும். உராய்வு நீக்கிப் பொருட்கள், தார் அல்லது தங்கம் என்பவற்றின் மீது இறக்குமதி அனுமதிப்பத்திர கட்டணம் அறவிடப்படும். கம்பனி வருடாந்த அனுமதிப்பத்திரக் கட்டணம் மற்றும் கம்பனி சுயதலைப்புக் கட்டணம் என்பன கம்பனிகள் மீது விதிக்கப்படும்.
வெளிநாடுகளிலிருந்து உள்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு தமிழ், சிங்கள மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்யப்படும் தொலைக்காட்சி நாடகங்கள் மீது பிரயோகிக்கப்படும் விதிப்பனவு அதிகரிக்கப்படும்.
தலா ஒரு சிம் அட்டைக்கு சிம் அட்டை செயற்பாட்டு விதிப்பனவு 200 ரூபாவாக விதிக்கப்படும். போக்குவரத்து குற்றங்கள் தொடர்பான ஸ்தல தண்டம் விதிக்கத்தக்கவாறு மீள்வகுப்பாக்கம் செய்யப்படவுள்ளது. அத்துடன் குறைந்த பட்ச தண்டப்பணம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்படும். மின்சாரக் கார்கள், டிரக்டர்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் மீது புகைப்பரிசோதனைக் கட்டணத்துடன் செலுத்தத்தக்கதாக காபன் வரி விதிக்கப்படும்.