அம்பலத்துக்கு வரும் ஆவா குழு இரகசியம் -சிறப்பு கட்டுரை
வடக்கில் ஆவா குழு மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளதோ
இல்லையோ தெற்கில் அதனை வைத்து தாராளமாகவே அரசியல் நடத்தப்பட்டு வருகிறது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டதையடுத்து, சுன்னாகத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவு பொலிஸார் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகினர்.
அந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று ஆவா குழு வெளியிட்ட துண்டுப் பிரசுரங்கள் தான், இப்போது தென்னிலங்கை அரசியலில் பரபரப்பாக பேசப்படும் ஆகப் பிந்திய விவகாரமாக மாறியிருக்கிறது. மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தையும், மஹிந்த ராஜபக் ஷ தரப்பினர் ஆரம்பிக்கும் புதிய கட்சி தொடர்பான செய்திகளையும் கூட இந்த ஆவா குழு விழுங்கிவிட்டது.
ஆவா குழுவின் உரிமை கோரல் துண்டுப்பிரசுரங்கள் வெளியானதுமே, “அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்” என்று காத்திருந்தவர்கள் போன்று, மஹிந்த ஆதரவு அரசியல் தலைவர்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அபாயச் சங்கு ஊதத் தொடங்கி விட்டனர்.
மஹிந்த ராஜபக் ஷ தொடக்கம், அவரது அணியில் உள்ளவர்கள் அத்தனை பேரும் இந்த விவகாரத்தை தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல் போலவே வெளிப்படுத்தி வருகின்றனர்.
இன்னொரு பக்கத்தில், பொதுபலசேனா, இராவண பலய போன்ற சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்புகளும், ஆவா குழு பற்றிய பிரசாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றன.
ஆவா குழுவை எதிர்கொள்ள தாமும் ஒரு குழுவை ஆரம்பிக்கப் போவதாக இராவண பலய அமைப்பின் தலைவர் சத்தாதிஸ்ஸ தேரர் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு சாதாரண வாள்வெட்டுக் குழுவை, மிகப் பெரியளவிலான அச்சுறுத்தலாக காட்டுவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் எடுத்த பெரும் பிரயத்தனம், இந்த விவகாரத்தை வைத்து அவர்கள் எந்தளவுக்கு குளிர்காய முனைகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியது.
தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தின் ஆழ, அகலத்தை தெரியாத சுத்தசூனிய சிங்களத் தலைமைகளும், அரசியல்வாதிகளும் தான், ஆவா குழுவினால் அதற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக பிரசாரங்களை செய்து கொண்டிருந்தனர்.
அரசாங்கத் தரப்பில் இருந்த சம்பிக்க ரணவக்க போன்ற அமைச்சர்களும் கூட, புலிகளை அழித்த படையினரால் ஆவா குழுவை அழிக்க முடியவில்லை என்பது போன்ற கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் தான், கடந்த புதன்கிழமை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக் ஷவே ஆவா குழுவை உருவாக்கினார் என்று குற்றம்சாட்டியிருந்தார்.
தனக்குத் தெரிந்த முன்னாள் இராணுவ அதிகாரியான பிரிகேடியர் ஒருவரே வடக்கில் இந்தக் குழுவை செயற்படுத்தியதாகவும், அவர்களுக்கான தங்குமிடம், மோட்டார் சைக்கிள்கள், ஆயுதங்களை வழங்கியதாகவும் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.
போர்க்காலத்தில் புலிகளை ஒடுக்குவதற்கு பயன்படுத்துவதற்கு இந்தக் குழு தேவைப்பட்டிருக்கலாம் என்றும், தற்போது அந்தக் குழு மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளதை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதைவிட அவர் வெளியிட்ட ஒரு தகவல் என்னவென்றால், வடக்கில் ஆவா குழுவினரைப் பயன்படுத்தி அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டவர்கள், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது என்பதுதான்.
இராணுவமே ஆவா குழுவை இயக்குகிறது என்பதையும், முன்னைய அரசாங்கமே அதனை உருவாக்கியது என்பதையும், அமைச்சரவையின் சார்பில் பேசும் அதிகாரம் படைத்த அமைச்சர் ஒருவர் ஒப்புக்கொண்டது முக்கியமான விடயம். அதுவும், முன்னைய அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஒருவரே, தாமும் அந்த அரசாங்கத்தில் தான் பதவி வகித்தேன் என்பதையும், இதுபோன்ற செயல்களுக்குத் தாமும் பொறுப்பு என்பதையும் மறந்து, அதுபற்றிய எந்தக் கூச்சமும் இல்லாமல் இதனை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
மஹிந்த ஆதரவு கூட்டு எதிரணியினரும், சிங்கள அரசியல்வாதிகள் சிலரும், ஆவா குழு, விடுதலைப் புலிகளின் பிரதி விம்பமே என்று பிரசாரம் செய்து வந்த நிலையில்தான் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இராணுவமே அதனை உருவாக்கியது என்பதை போட்டு உடைத்திருந்தார். முன்னதாக, விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளே செயற்படுத்துவதாகவும், புனர்வாழ்வளிக்கப்பட்ட 12 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் கைது செய்ய வேண்டுமென்று அரசாங்கத்தில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க கோரியிருந்தார்.
அதுபோலவே பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பிலவும், ஆவா குழுவுக்குப் பின்னால் புலிகளும், புலம்பெயர் தமிழர்களுமே இருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
எனினும் புலம்பெயர் தமிழர்களுக்கோ, விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கோ ஆவா குழுவுடன் தொடர்பில்லை என்பதை அமைச்சர் ராஜித சேனாரத்ன மாத்திரமன்றி, முன்னாள் இராணுவத் தளபதியான அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் கூட உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
கோத்தாபய ராஜபக் ஷவே ஆவா குழுவை உருவாக்கினார், அதனை இராணுவ அதிகாரிகள் சிலரே இயக்கினர் என்பதை அமைச்சர் ஒருவர் வெளிப்படுத்திய பின்னர், அப்படி நடந்திருக்கக் கூடும் என்று தனது முன்னைய சுருதியை மாற்றிக் கொண்டிருக்கிறார் நிசாந்தசிறி வர்ணசிங்க.
வடக்கில் நடக்கின்ற எல்லா சம்பவங்களுடனும் விடுதலைப் புலிகளுடனும், தேசிய பாதுகாப்புடனும் முடிச்சுப் போட்டுப் பழகிவிட்ட சிங்கள அரசியல் தலைமைகள், ஆவா குழு விவகாரத்தை தமது வழமையான பிரசாரங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டது ஆச்சரியமல்ல.
எனினும், ஆவா குழு பற்றிய பாரிய மாயை ஒன்றை உருவாக்க முனைந்து இப்போது அம்பலப்பட்டு நிற்பவர்களும் அவர்கள்தான்.
இப்போது, ஆவா குழுவின் பின்னணி என்ன- அது எங்கிருந்து, யாரை நோக்கி ஏவிவிடப்பட்டது என்பது பற்றி ஓரளவுக்கு விளங்கிக் கொள்ளக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
கோத்தாபய ராஜபக் ஷவே ஆவா குழுவை உருவாக்கினார் என்ற அமைச்சர் ராஜித சேனாரத்னவின் குற்றச்சாட்டை, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக் ஷ நிராகரித்திருக்கிறார்.
எனினும், முன்னைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர் என்ற வகையிலும், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் என்ற வகையிலும், ராஜித சேனாரத்னவின் இந்தக் குற்றச்சாட்டை, சாதாரணமாக ஒதுக்கிவிடமுடியாது. அவரது வழக்கமான அரசியல் வேட்டுக்களாக இதனைக் கருத முடியாது.
ஏனென்றால், தனக்குத் தெரிந்த பிரிகேடியர் ஒருவரே இந்தக் குழுவை வழிநடத்தினார் என்பதையும் அவர் கூறியிருக்கிறார்.
அவ்வாறாயின், இதன் ரிஷிமூலம் என்ன என்பது அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆவா குழுவை அடக்கும் முயற்சிகளை அரசாங்கம் உண்மையாகவே மேற்கொள்கிறது என்றால், இதுபோன்ற தகவல்களைக் கொண்டே அதனைச் சுலபமாகச் செய்துவிடலாம்.
அதைவிட, போர்க்காலத்தில் புலிகளை அழிப்பதற்கான நடவடிக்கைக்கும், ஆவா குழுவை உருவாக்கிய செயற்பாட்டுக்கும் அமைச்சர் ராஜித சேனாரத்ன போட முனைந்த முடிச்சு, மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் இடையில் போட முயன்ற முடிச்சாகவே தெரிகிறது.
ஆனாலும், அரசாங்கத்துக்கு எதிரானவர்களையும், ஊடகவியலாளர்களையும் தாக்குவதற்கு இதுபோன்ற குழுக்களை முன்னைய அரசாங்கம் பயன்படுத்தியது என்பதை அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அமைச்சர் ஒருவர் இத்தகைய தகவல்களை அறிந்து வைத்திருந்தும் கூட, வடக்கில் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசுக்கு எதிரான கருத்துடையோர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஆவா குழு பற்றிய இத்தனை தகவல்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றால், அது ஒன்றும் வடக்கு மக்களின் மீது கொண்ட கரிசனையால் அல்ல.
அரசியல் நோக்கம் கருதியே இத்தனை தகவல்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
ஆவா குழு மீண்டும் செயற்படத் தொடங்கிய பின்னர், அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் அதிகரித்தன. இதனை தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக காண்பித்து, மஹிந்த அணியினரும் சிங்கள அரசியல் தலைமைகளும் அரசியல் இலாபமீட்ட முயற்சித்தனர்.
இதனைத் தடுப்பதற்காகவே, அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஆவா குழு பற்றிய இரகசியங்களை அவிழ்த்து விட்டார்.
ஆக மொத்தத்தில் வடக்கு மக்களை அடங்கும் நோக்கத்துக்காக மாத்திரமன்றி, தெற்கின் அரசியல் நலன்களுக்காகவும் ஆவா குழு பயன்படுத்தப்படுகிறது.
இதில் மகிந்த அணி- மைத்திரி அணி என்று எந்த வேறுபாடும் இல்லை.
-என்.கண்ணன்-
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்