Breaking News

ஹோலிப் பண்டிகை - இலங்கை மீதான இன்னொரு இந்திய கலாச்சார ஆக்கிரமிப்பு

இன்றைய வலைப் பதிவு( Balan tholar)

எதிர்வரும் 20 ம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரக ஏற்பாட்டில் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹோலிப் பண்டிகை ஒரு வட இந்திய பண்டிகை. அது இந்தியாவில் தமிழ்நாட்டில்கூட கொண்டாப்படுவதில்லை. ஆனால் அப் பண்டிகை எதற்காக அதுவும் இந்த மாதம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதற்கு இந்திய தூதரால் ஏற்பாடு செய்யப்படுகிறது? இந்தமாதம் ஈழத் தமிழ் மக்கள் இறந்த தம் உறவினர்களை மாவீரர்களாக உலகமெல்லாம் நினைவு கொள்ளும் மாதமாகும்.

மாவீரர் நினைவு நாளைக் குழப்புவதற்காகவே இந்திய அரசினால் திட்டமிட்டு இந்த மாதம் 20ம் திகதி இவ் விழா யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. ஏனெனில் ஹோலிப் பண்டிகைக்கும் ஈழத் தமிழருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது மட்டுமல்ல இந்த பண்டிகை இந்த மாதத்தில் எங்குமே கொண்டாடப்படுவதும் இல்லை. 

வாள் வெட்டு மலிந்து காணப்படும் யாழ்ப்பாணத்தில் பெண்கள் மீது நிறப் பவுடரை பூசும் இந்த ஹோலிப் பண்டிகையினால் இன்னும் என்ன விபரீதங்கள் நிகழப் போகுதோ தெரியவில்லை. இந்தியா ஈழத் தமிழ் மக்கள் மீது கொண்ட அன்பினால் இந்த பண்டிகையை அறிமுகப்படுத்துகின்றது என்று இந்தியாவில் வாழ்ந்து வரும் மாவை சேனாதிராசா சொல்லக்கூடும். அதேபோல், இந்தியாவின் இந்த பண்டிகையை தடுத்தால் சீனாவின் பண்டிகை வந்துவிடும் என்று இந்திய விசுவாசி சம்பந்தர் அய்யா கூறக்கூடும். அண்மையில் இந்தியாவில் ஒரு குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

அதன்படி பங்களாதேஸ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஈழ அகதிகளுக்கு வழங்கப்படவில்லை. ஈழத் தமிழ் மக்கள் மீது கொண்ட அக்கறையினால்தான் ஹோலிப்ட பண்டிகையை இந்தியா யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்கிறது எனில் 33 வருடங்களாக தமிழகத்தில் அகதியாக இருக்கும் ஈழ அகதிகளுக்கு ஏன் இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை? 

இந்த தமிழ் தலைவர்களிடம் நான் கேட்க விரும்புவது என்னவெனில், ஏன் இந்தியா ஈழ தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதில் பாரபட்சம் காட்டுகின்றது? குடியுரிமை வழங்காவிட்டாலும் பரவாயில்லை. சட்டவிரோதமாக பல ஈழ அகதிகள் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். 

அவர்களை விடுதலை செய்து அவர்கள இலங்கை திரும்பிவர யாழ் இந்திய தூதர் வழி செய்வாரா? ஹோலிப் பண்டிகை என்னும் பெயரில் யாழ் தமிழ் பெண்களுக்கு நிறப்பவுடர் பூச வரும் யாழ் இந்திய துணைத்; தூதரிடம் இதனை யாராவது கேட்பீர்களா?