Breaking News

இலங்கையை தொடர்ச்சியாக கண்காணிக்கும் பொறிமுறையை உருவாக்க வேண்டும்- சம்பந்தன்



அனைத்துலக சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்றியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே, ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளவழங்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு நேற்று, நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது.

இந்தச் சந்திப்பின் போது, ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை சிறிலங்காவுக்கு மீண்டும் வழங்குவது குறித்த கூட்டமைப்பின் நிலைப்பாட்டை, ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் கேட்டறிந்து கொண்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

“ஜிஎஸ்பி வரிச் சலுகையை மீள வழங்குவதற்கு நாம் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இதனை நாம் வரவேற்கின்றோம்.

ஆனாலும், அனைத்துலக சமூகத்துக்கு சிறிலங்கா வழங்கிய பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பது, நல்லிணக்கம், அரசியலமைப்புத் திருத்தம் என பல்வேறு வாக்குறுதிகள் சிறிலங்காவினால் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குறுதிகள் சரியான முறையில் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை அனைத்துலக சமூகம் அவதானிக்க வேண்டும்.

சிறிலங்கா புதிய திசையொன்றை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது என்பதை ஏற்கின்றோம். எனினும், இது எந்தளவு தூரம் சரியாக செல்கிறது என்பதை முழுமையாக ஆராய்ந்து மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை புதுப்பிப்பதாக அல்லது மீளவும் வழங்குவதாக இருந்தால் சிறிலங்காவை தொடர்ச்சியான மீளாய்வுக்கு உட்படுத்தும் பொறிமுறையொன்றை தயாரிக்க வேண்டும்.

இதனூடாகவே நாடு சரியான பாதையில் பயணிக்கிறதா என்பதைக் கண்காணிக்க முடியும் என்று, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தரப்பில் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்” என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.