Breaking News

கைத்தொழில்மயமாக்கலில் கவனம் செலுத்தும் இலங்கை – சீனாவுக்கு 50 சதுர கி.மீ நிலம்

கைத்தொழில்மயமாக்கல் நடவடிக்கைக்காக சிறிலங்காவின் தென்பகுதியில் சீன வர்த்தகர்களுக்கு 50 சதுர கி.மீ நிலப்பகுதியை வழங்கவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


15 ஆவது ஆசிய பசுபிக் பிராந்திய கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, ஹொங்கொங் சென்றுள்ள அவர், அங்கு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

“தாய்லாந்திலும், மலேசியாவிலும் ஜப்பான் எதைச் செய்ததோ அதுபோலத் தான் இதுவும்.

முன்னர் நாங்கள் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் கவனம் செலுத்தினோம். ஆனால் இப்போது உட்கட்டமைப்பு அபிவிருத்தியுடன், உற்பத்தித்துறையிலும் இணைந்திருக்கிறோம்.

கம்பியில்லா இணைய வசதிகளை நாடெங்கும் அபிவிருத்தி செய்கிறோம்., தகவல்தொழில்நுட்ப பொறியாளர்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவகங்கள்  எமக்குத் தேவைப்படுகிறார்கள்.

சீனா தனது ஒரு வாயில் ஒரு கதவு முறையில் வந்திருக்கிறது. ஜப்பானும் கூட வர்த்தக உடன்பாடுகளுக்கு வந்து கொண்டிருக்கிறது.

சீனாவும், ஜப்பானும் நிதி அளித்திருக்கின்றன. ஆசியாவின் அபிவிருத்திக்கு எவ்வாறு இணங்கிச் செயற்படலாம் என்று ஒவ்வொரு நாடும் முடிவு செய்ய வேண்டியுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.