Breaking News

நிலைகளை தாக்கி அழித்ததில் பாகிஸ்தான் படையினர் 40 பேர் பலி

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் முகாம்கள் அமைத்து, இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்த சதிசெய்து கொண்டிருந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்ற பெயரில் துல்லியமான அதிரடி தாக்குதல் நடத்தியது.


இதில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 40-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாடு தொடர்ந்து எல்லைப் பகுதியில் வாலாட்டி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் மீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளில் (அக்டோபர் மாதம் 28-ந் தேதி), எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை (குப்வாரா மாசீல் செக்டார்) பாகிஸ்தான் படையின் ஆதரவால் பயங்கரவாதிகள் எல்லை தாண்டி வந்து சண்டையிட்டு இந்திய வீரர் மன்தீப் சிங்கை (வயது 30) கொன்றனர்.

அதுமட்டுமின்றி, அவரது உடலை இழுத்துச்சென்று வெட்டி சிதைத்தனர். பாகிஸ்தானின் இந்த வெறியாட்டம், இந்தியாவில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. இதற்கு தகுந்த பதிலடி தர வேண்டும் என்று மன்தீப் சிங்கின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

அந்த சூட்டோடு சூடாக கெரன் செக்டாரில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள், பாகிஸ்தானுக்கு பதிலடி தருகிற வகையில் அதிரடியாக களத்தில் இறங்கினர். எல்லைப்பகுதியையொட்டி பாகிஸ்தான் அமைத்திருந்த ராணுவ நிலைகள் மீது இந்திய வீரர்கள் மின்னல் வேக தாக்குதலை நடத்தினார்கள். இதில் 4 நிலைகள் நிர்மூலமாக்கப்பட்டன.

பாகிஸ்தானுக்கு மரண அடியாக அமைந்த இந்த தாக்குதலில் பலியான பாகிஸ்தான் துருப்புகள் பற்றி இப்போது பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான் படையினர் 40 பேர் கொன்று குவிக்கப்பட்டனர் என்று ‘சி.என்.என்- நியூஸ் 18’ தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.