மாவீரர்களுக்கு உயிர் கொடுப்பு: மஹிந்த அணி ஆக்ரோஷம்
இது புதுமையான அரசாங்கமாகும், வடக்கில் மாவீரர்கள் நினைவு தினம் ஞாயிற்றுக்கி ழமையன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதன் ஊடாக, மாவீரர்களுக்கு உயிர்கொடுக்கப்பட்டுள்ளது” என்று, மஹிந்த அணி குற்றஞ்சாட்டியது.
“பிரிவினைவாத புலிப் பயங்கரவாதிகளுக்கு உயிரூட்டிய இந்த அரசாங்கமானது, படையினரைப் பயங்கரவாதிகளாக்கி சிறைச்சாலைகளில் அடைக்கின்றனர்” என்றும் குற்றஞ்சாட்டியது.
நாடாளுமன்றத்தில், நேற்றுத் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற, போக்குவரத்து அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மஹிந்த ஆதரவு அணியான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில, ‘“நாட்டில் புலிப் பயங்கரவாதிகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று மாவீரர்கள் நினைவுகூரப்பட்டுள்ளனர். ஆக, அநுராதபுரத்துக்கு அப்பால் தனிநாடொன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதா?” என்று வினவினார்.
“ஊடக சுதந்திரம் பற்றி பேசியவர்கள், இன்று ஊடகத்துறைக்கு பெரும் அச்சுறுத்தல்களை விடுக்கின்றனர். அரச ஊடகங்களில் முக்கிய பல நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வமற்ற ரீதியில் ஊடக தணிக்கை அமுலில் இருந்துவருகின்றது. சி.எஸ்.என் ஊடகத்துக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, வடக்கில் பெருமெடுப்பில் மாவீரர்தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. மாவீரர்கள் சாகவில்லை. மீண்டும் உயிர்த்தெழுவார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் தின நிகழ்வுகள் மற்றும் அந்த எம்.பியின் பேச்சுத் தொடர்பில், தெற்கிலுள்ள ஊடகங்களில் பெரிதாக செய்தி வெளியாகவில்லை. திட்டமிட்டப்படி அந்த நிகழ்வு குறித்த செய்திகள் தடுத்து நிறுத்தப்பட்டதா?” என்றும் அவர் வினவினார்.