Breaking News

அரசியல் தீர்வு இழுத்தடிப்பு; நாட்டை ஆபத்தில் தள்ளும்! - நஸீர் எச்சரிக்கை

தருகிறோம் இன்னும் தருகிறோம் எனக் காலந் தாழ்த்தி இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்படுமாயின் அது இந்த நாட்டை ஆபத்தில் தள்ளும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் எச்சரித்துள்ளார். 

கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சியைப் பூர்த்தி செய்துகொண்டுள்ள வேளையில் கிழக்கு மாகாணத் துக்கு வெளியே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை மீண்டும் கிழக்கு மாகாணத்திலேயே நியமிப்பதற்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர், பாரிய அழிவுகளைச் சந்தித்த இந்த நாடு, அதிலிருந்து பாடம் கற்று இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிப் பயணிக்கா விட்டால், இந்த நாட்டின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகும். 

ஆகவே, எந்தவித தாமதமும் இல்லாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட்டு அது அமுல்படுத்தப்பட வேண்டும். 13ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இந்த நாட்டில் எவரும் இருக்கமுடியாது. 

நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எல்லோரும் 13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொண்டு, சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு பின்னர் அதனை வழங்குவதற்கு மறுக்க முடியாது. அரசியல் இழுத்தடிப்பு இந்த நாட்டுக்கு நல்லதல்ல. இனப்பிரச்சினைக்கான முன்னெடுப்பை உடனடியாக எடுக்க வேண்டும். 

13ஆவது திருத்தத்தின் மூலம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் உண்மையாகவே எங்களுக்கு இருந்திருந்தால் ஆசிரியர்களாகிய நீங்களும் வெளிமாகாணங்களில் அலைந்து திரிந்து இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதேவேளை, இந்த மாகாண சபையை முன்னர் நிர்வகித்தவர்களின் அசமந்தப் போக்கே ஆசிரியர்களை மேலும் சிரமப்பட வைத்தது. 

தற்போது கடந்த ஒரு வருடகாலமாக நாம் தொடராக மேற்கொண்ட போராட்டத்தின் வெற்றியயைக் கொண்டு இன்று உங்களை கிழக்கு மாகாணத்திலேயே கிட்டிய இடங்களில் நியமித்திருக்கின்றோம். 
எமது நிர்வாகக் காலத்திலே இந்த மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லாது நிவர்த்தி செய்வதற்குரிய அனைத்து முயற்சிகளையும் எடுத்து துரிதமாகச் செயற்பட்டு வருகின்றோம். 

கடந்த கால மாகாண சபை ஆட்சியாளர்களால் விடப்பட்ட நிர்வாகத் தவறுகள் எமது தோள்களை அழுத்தி யுள்ளன. 

பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை பரீட்சைகளின்றி வழங்கவும் நாம் உரிய ஒழுங்குகளைச் செய் துள்ளோம். கிழக்கு மாகாண எதிர்கால சந்ததியின் கல்வி, ஆசிரியர் களாகிய உங்கள் கைளிலேயே உள்ளது. எனவே, உங்கள் கடமைகளை சிறப்பாகச் செய்து இந்த மாகாணத்தை கல்வியில் முன்னேற்ற உதவுங்கள் என கிழக்கு முதலமைச்சர் தெரிவித்தார்.