Breaking News

அம்பாறையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம்: பேச்சுவார்த்தை புறக்கணிப்பு



இலங்கையில் அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்திலுள்ள மலையொன்றில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழு இன்று வெள்ளிக்கிழமை கூடவிருந்த போதிலும் இறுதி நேரத்தில் தமிழ் , முஸ்லிம் பிரதிநிதிகளின் புறக்கணிப்பு காரணமாக கூடவில்லை.

பௌத்தர்கள் அல்லாத இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாணிக்கமடு கிராமத்திலுள்ள மாயக்கல்லி மலையில் கடந்த சனிக்கிழமை பௌத்த பிக்குகளினால் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை அந்த பிரதேசத்தில் ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த பிரச்சனை தொடர்பாக ஆராய்வதற்கு கடந்த புதன்கிழமை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரால் கூட்டப்பட்ட சிறப்பு கூட்டத்தில் பௌத்த பிக்குகள் , தமிழ் , முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அதிகாரிகளை கொண்ட 15 பேர் கொண்ட குழுவான்று நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த குழு இன்று புதன்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் கூடி இந்த விவகாரத்தை ஆராயந்து முடிவு எடுப்பது என்று அன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள மாணிக்கமடு வழியாக தங்களின் புனித தலமான தீகவாவிக்கு செல்லும் யாத்திரிகர்கள் நலன்கருதி மடமொன்றும் பௌத்த பிக்குகள் தங்குமிடமொன்றையும் அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பௌத்த பிக்குகள் வலியுறுத்தியிருந்தார்கள்.

ஏற்கனவே புத்தர் சிலை விவகாரம் நீதிமன்ற விவகாரமாகவுள்ள நிலையில் தற்போதைக்கு இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என தமிழ் -முஸ்லிம் தரப்பு கூடி முடிவு எடுத்ததாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி , பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கும் இந்த விடயத்தை முன் வைத்து தீர்வொன்றை காண்பது குறித்தும் தமிழ் - முஸ்லிம் தரப்பு கூடி முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று வெள்ளிக்கிழமை கூடவிருந்த 15 பேர் கொண்ட குழு கூட்டம் நடைபெறாத நிலையில் அரசாங்க அதிபர் உட்பட அதிகாரிகள் அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.