நல்லிணக்கத்துக்கு தடையாக முதல்வர் விக்கினேஸ்வரன்
நல்லிணக்கம் என்பது தெற்கில் மாத்திரம் ஏற்படுத்தப்படாது. வடக்கில் இருந்தும் நல்லிணக்கத்தின் பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆனால் நல்லிணக்கத்தை தடுக்கும் வகையிலான கருத்துக்களையே விக்கினேஸ்வரன் முன்வைத்து வருகின்றார்.
தான் முன்வைக்கும் கருத்தக்கள் தொடர்பில் விக்கினேஸ்வரன் கூடிய கவனம் எடுக்க வேண்டும் என வடமாகான ஆளுநர் ரெஜினோல் குரே தெரிவித்தார். கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள வடமாகாண ஆளுனர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
செய்தியாளர் சந்திப்பில் ஆளுநர் மேலும் கூறுகையில், நல்லிணக்கம் என்பது தெற்கில் மாத்திரம் பேசப்படுவது பொருத்தமற்றது. வடக்கிலும் நல்லிணக்கத்தின் பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும். இரண்டு பக்கத்திலும் இனவாத கருத்துக்கள் பலமடைவதை போலவே நல்லிணக்கமும் இரண்டு தரப்பில் இருந்தும் உருவாக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்கள் ஜனநாயகத்தை விரும்புகின்றனர், நல்லிணக்கத்தை விரும்புகின்றனர். சிங்களவர்களும் அதே நிலைப்பாட்டில் உள்ளனர். அவ்வாறு இருக்கையில் ஒரு சிலர் தமது அரசியல் சுயநலத்தை கருத்தில்கொண்டு இனவாதமாக செயற்படக்கூடாது.
வடக்கில் இராணுவமயமாக்கல் இருப்பதாக தொடர்ந்தும் வடக்கு முதலமைச்சர் குற்றம்சுமத்தி வருகின்றார். உண்மையில் இன்றும் வடக்கில் மக்களின் உதவிக்கு இராணுவமே உள்ளது. வடக்கில் நடைபெற்றுவரும் அபிவிருத்திகள், பாதுகாப்பு இரண்டுக்கும் இராணுவம் துணை நிற்கின்றது. புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கும் விசஊசி போடப்பட்டதாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. வடக்கு முதல்வர் இந்த கருத்தை சர்வதேசம் வரையில் கொண்டு சென்றார்.
ஆனால் இன்று அந்தக்கதையை மறந்துவிட்டனர். இந்த கருத்தை முன்வைத்த போது வடக்கில் மக்கள் மத்தியில் தவறான ஒரு நிலைப்பாடு எழுந்தது. ஆனால் இன்று மக்களே விளங்கிக்கொண்டுள்ளனர். வடக்கில் தமிழ் மக்களை அழிக்க விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உண்மையில் தலைவர் ஒருவர் முன்வைக்கும் கருத்துக்கள் மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகவும் அதன் தாக்கம் தொடர்பில் அறிந்தும் முன்வைக்கப்பட வேண்டும். இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதன் விளைவுகளை நன்கு அறிந்தும் விக்கினேஸ்வரன் செயற்படுவது கண்டிக்கத்தக்க விடயமாகும்.
வடக்கின் நல்லிணக்கத்துக்கு தடையாக உள்ளதைப்போன்ற கருத்துக்களையே விக்னேஸ்வரன் முன்வைத்து வருகின்றார். அவர் முன்வைக்கும் கருத்துக்கள் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் எவ்வாறான நிலைமைகளை உருவாக்குகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே விக்கினேஸ்வரன் முன்வைக்கும் கருத்துக்கள் தொடர்பில் அவர் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.
மிகவும் அவதானத்துடன் கருத்துக்களை வெளியிட வேண்டும். வடக்கின் தலைவர் வெறுமனே வடக்கை மாத்திரம் கவனத்தில் கொள்ளாது தெற்கையும் கவனத்தில் கொள்ள வேண்டும் . தெற்கையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.