சிவாஜிலிங்கத்திடம் மன்னிப்புக் கோரினார் சீ.வீ.கே (2ஆம் இணைப்பு)
வட மாகாண சபை உறுப்பினர்களுக்கான சிறப்புரிமை குறித்து இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தின் போது, ”உனக்கு” என்ற வார்த்தையை பிரயோகித்தமைக்காக, மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்
வட மாகாணசபையில் அமளி - மீண்டும் செங்கோலை தூக்க முற்பட்டார் சிவாஜி
சிறப்புரிமை தொடர்பாக வட மாகாண சபையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து, மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்கிச் செல்ல முற்பட்டுள்ளார். எனினும் சக உறுப்பினர்களால் அது தடுத்து நிறுத்தப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட மாகாண சபையின் 65ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வருகின்றது.
இதன்போது, வட மாகாண சபை உறுப்பினர்களின் சிறப்புரை குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எவ்வித கோரிக்கைகளையும் விடுப்பதில்லையென மாகாண சபை உறுப்பினர் ஜயதிலக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனையடுத்து கருத்துத் தெரிவித்த வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியதோடு, தமக்கு அவ்வாறான சிறப்புரிமைகள் வழங்கப்படுவதில்லையென குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து உறுப்பினர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதோடு, சிவாஜிலிங்கம் செங்கோலையும் தூக்கிச்செல்ல முற்பட்டுள்ளார்.
வட மாகாண சபையில் இதற்கு முன்னரும் ஒரு தடவை சபை இடைநடுவில் சிவாஜிலிங்கத்தால் செங்கோல் எடுத்துச்செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது