ஆவா குழுவின் உருவாக்கம்; ராஜிதவின் அதிர்ச்சித் தகவல்
இராணுவத்தின் ஒத்துழைப்புடனேயே ஆவா குழு இயங்குகிறது என வடக்கின் முதலமைச்சர் சந்தேகம் வெளியிட்டு 24 மணித்தியாலத்திற்குள் அதனை அமைச்சர் ராஜித சேனாரட்ன உறுதி செய்துள்ளார்.
ஆவா குழு என்பது முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் மகிந்த ராஜபக்வின் சகோதரருமாகிய கோத்தபாய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட ஓர் இரகசிய ஆயுதக்குழு.
இந்த ஆயுதக்குழுவுக்கான நிதி கோத்தபாய ராஜபக்ச தரப்பால் வழங்கப்பட்டது என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.
வட புலத்தில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற அமைப்பு என இனங்காணப்பட்ட ஆவா குழு தொடர்ந்தும் இயங்குவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியிருப்பது. ஆவா குழுவின் உருவாக்கம் தொடர்பில் ஒரு தெளிவை ஏற்படுத்தியிருக்கிற போதிலும் அதன் மறு பக்கம் பலத்த சந்தே கங்களையும் கேள்விகளையும் ஏற்படுத்தவே செய்கிறது.
அதாவது கோத்தபாய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட ஆவா குழு என்பது நல்லாட்சியிலும் யாழ்ப்பாணத்தில் இயங்குகின்றது எனில் வடபுலத்தில் - யாழ்ப்பாணத்தில் இன்னமும் மகிந்த ராஜபக்ச வின் அதிகாரம் படைத்தரப்பிற்குள் இருக்கிறதா என்ற கேள்வியை ஏற்படுத்துகின்றது.
படைத்தரப்பிற்குள் இன்னமும் மகிந்த ராஜபக்ச தரப்பின் அதிகாரம் செல்லுபடியாகுமாக இருந்தால், வடபுலத்தின் அமைதி என்பது எந்நேரமும் ஆபத்துக்குரியது என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.
அதேநேரம் கோத்தபாய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட ஆவா குழு இன்னமும் இயங்கு நிலையில் இருப்பதாயின் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு - முற்றாக இல்லாது செய்வதற்கு நல்லாட்சி எடுத்த நடவடிக்கை என்ன? என்ற வினா தமிழ் மக்களிடம் எழுகை பெறுவதில் நியாயம் இருக்கவே செய்யும்.
அவ்வாறான வினாவின் மத்தியில் நல்லாட்சிக்குள் இருக்கக் கூடிய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் மகிந்த தரப்பின் ஆதரவாளர்களாக இருப்பதின் அடிப்படையில், படையினரின் ஆதரவு ஆவா குழுவுக்கு உண்டு என்றும், அதன் காரணமாக ஆவா குழு இன்னமும் இயங்கு நிலையில் உள்ளது என்றும் கருதுவதில் தவறில்லை.
இவை ஒருபுறம் இருக்க, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் சுன்னாகம் பகுதியில் சிவில் உடையில் நின்ற இரண்டு பொலி ஸாரை இனம் தெரியாதவர்கள் வாளால் வெட்டி யிருந்தனர்.
இச்சம்பவம் ஓர் அச்ச சூழ்நிலையை ஏற்படுத்தி யிருந்தது. இச்சம்பவம் நடந்த மறுநாள் ஆவா குழு என்ற பெயரில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் இரண்டு பொலிஸாரையும் வாளால் வெட்டியதை உரிமை கோரியதுடன் தமிழ் மக்களின் கலை, கலாசாரத்தை பேணுவதில் ஆவா குழு தொடர்ந்தும் செயலாற்றும் என்பது போன்ற வாசகங்கள் அந்த பிரசுரத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இப்போது ஆவா குழு என்பது கோத்தபாய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட இரகசிய அமைப்பு என்று அமைச்சர் ராஜித சேனரட்ன கூறியிருக்கையில்,
பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியது தாமே என்று ஆவா குழு உரிமை கோரியதை பார்க்கும் போது, வடபுலத்தில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதால் - அதன் மூலம் தென்பகுதியில் தமிழ் மக்களுக்கு எதிரான போக்கை பாதுகாப்பது, தமிழ் மக்களுக்கான ஓர் ஆயுத அமைப்பாக ஆவா குழுவை காட்டுவதில் ஒரு பெரும் திட்டம் செயலாகுகிறதென்பது உணரப்படக் கூடியதாகும்.
ஆகவே, இதிலிருந்து தமிழ் மக்களைப்பாதுகாப்பது நல்லாட்சியின் தலையாகிய கடமை.