ஞானசார தேரரை இலங்கைக்கே திருப்பி அனுப்பிய இந்திய குடிவரவு அதிகாரிகள்
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், விமான நிலையத்தில் இந்திய குடிவரவு அதிகாரிகளால் மீண்டும் சிறிலங்காவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.
இலக்கிய விழா ஒன்றில் பங்கேற்பதற்காக ஞானசார தேரர் கடந்த 25ஆம் நாள் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தார்.
எனினும், அவர் இந்திய குடிவரவு அதிகாரிகளால் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்காததையடுத்து, மறுநாள் கொழும்பு திரும்பினார்.
காலாவதியான நுழைவிசைவைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைய முயன்றதால் தான் அவர் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருமுறை பயன்படுத்தும் நுழைவிசைவைப் பெற்றிருந்த ஞானசார தேரர், ஏற்கனவே இந்தியா சென்று கடந்த ஒக்ரோபர் 3ஆம் நாள் தொடக்கம் 15ஆம் நாள் வரை வாரணாசியில் உள்ள இசிபத்தனராமவில் தங்கியிருந்தார்.
இதன் போது அவர் ஒருமுறை நேபாளம் சென்று திரும்பியிருந்தார். இதனால் இரண்டுமுறை இந்தியாவுக்குள் நுழையும் அவரது நுழைவிசைவு காலாவதியாகியது.
இந்த நிலையிலேயே மீண்டும் அதே நழைவிசைவின் மூலம் இந்தியா செல்ல முயன்றபோது ஞானசார தேரர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.