Breaking News

இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முனைகிறதா சீனா?



சீனத் தூதுவர் வழமைக்கு மாறாக சிறிலங்காவின் நிதி அமைச்சர் மற்றும் சிறிலங்காவின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்த மையானது கொழும்பில் ஆட்சி மாற்றம் ஒன்றை சீனா எதிர்பார்ப்பதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் பலரும் உற்றுநோக்குகின்றனர்.

கடந்த செவ்வாயன்று ஊடக மாநாட்டை நடத்திய சீனத் தூதுவர் ஜி ஷியாங்லியாங் சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மூன்று தடவைகள் அவரது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் அளவிற்கு விமர்சித்திருந்தார். சீனத் தூதுவர் தன்னை அழைத்த நாட்டிலிருந்தவாறே அந்த நாட்டை வெளிப்படையாக விமர்சித்துள்ளதானது கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘இது தொடர்பில் சீன இராஜதந்திரிகள் ஒருபோதும் கருத்துக்களை வெளியிடுவதில்லை. அவ்வாறு கருத்துக்களைக் கூறினாலும் கூட இவ்வாறு தாங்கள் கூறுவதையே தமது அரசாங்கம் விரும்புவதாகவும் கூறுகின்றனர்’ என கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் ஆசிய இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.

சீனாவால் அதிகூடிய வட்டிக்கே’ கடன்கள் வழங்கப்படுவதாக வெளிப்படையாக அமைச்சர் ரவி கருணாநாயக்க விமர்சிக்கின்ற போதிலும் மீண்டும் சீனாவிடம் கடன் கோருவதாக சீனத் தூதுவர் ஜி தெரிவித்தார். ‘இது தொடர்பாக ரவி கருணாநாயக்க பல தடவைகள் வெளிப்படையாக விமர்சித்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இவ்வாறான ஒரு கடனை நீங்கள் விரும்பாவிட்டால் மீண்டும் மீண்டும் ஏன் எமது நாட்டிடம் கடன் கேட்கிறீர்கள் என நான் ரவி கருணாநாயக்கவிடம் வினவினேன்’ என ஊடக மாநாட்டில் சீனத் தூதுவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஐரோப்பாவிலிருந்து 5.8 சதவீத வட்டியுடன் 50 மில்லியன் டொலர் கடனாகப் பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கருணாநாயக்க தன்னிடம் தெரிவித்ததாகவும் ஆனால் 2.0 சதவீத சீனக் கடனை அதிக வட்டி என அமைச்சர் கூறுவதாகவும் சீனத் தூதுவர் தெரிவித்தார்.

நாட்டில் அபிவிருத்திச் செயற்பாடுகளைக் குறிப்பாக சீன நிதியுதவியுடனான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதில் சிறிலங்காவின் தேசிய அரசாங்கத்திற்குள் உள்ளகப் பிரச்சினைகள் இடம்பெறுவதாகவும் சீனத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

சீனத் தூதுவர் இந்த விடயத்தைத் தவறாகக் கற்பிதம் செய்துள்ளதாக கடந்த வியாழன் இரவு கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கடன் பத்திர விற்பனைகளின் மூலம் சிறிலங்காவால் கடனாகக் கோரப்படும் நிதியானது திட்டக் கடன்களுடன் ஒப்பீடு செய்ய முடியாது எனவும் இவ்வாறான திட்டக் கடன்கள் கடன் வழங்குனருக்குச் சாதகமான சில நிபந்தனைகளுடனேயே வழங்கப்படுவதாகவும் சீனத் தூதுவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக சீனத் தூதுவரிடம் அமைச்சர் கருணாநாயக்கவின் மூத்த ஆலோசகர் ஒருவர் தொடர்பு கொண்டு வினவியபோது இவ்வாறானதொரு கருத்தை உள்ளுர் ஊடகங்களிடம் தான் தெரிவிக்கவில்லை என சீனத் தூதுவர் தெரிவித்தாக நம்பகமான வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், சீனத் தூதுவர் ஊடக மாநாட்டில் தெரிவித்த கருத்தை காணொளி ஆவணங்கள் மூலம் சிறிலங்கா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதுடன் இது தொடர்பாக சிறிலங்கா வெளியுறவு அமைச்சிடமும் முறையீடு செய்யப்பட்டது.

கடந்த வியாழனன்று ஊடகவியலாளர்களுடன் ராஜபக்சவிற்குச் சார்பான சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் சந்திப்பொன்றை மேற்கொண்ட போது சீனத் தூதுவரின் கருத்துத் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தனர். அத்துடன் தற்போதைய சிறிலங்கா அரசாங்கமானது சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டை முன்னெடுத்து வருவதாகவும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்திற்குள் சில குழப்பங்கள் நிலவும் இந்த வேளையில் சீனத் தூதுவர் இவ்வாறானதொரு கருத்தை முன்வைத்தானது பிரதமரைக் கவிழ்ப்பதற்கான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நகர்வாக இருக்கலாம் என அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ச ஆட்சியையே சீனா விரும்புவதற்கான பிறிதொரு சம்பவமாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கடந்த மாதம் சீனாவில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தமை உற்றுநோக்கப்படுகிறது.

ஊழல் மோசடி தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள கோத்தபாயவை எந்த அடிப்படையில் சீனா அழைத்தது என்பது தெளிவாகவில்லை.

ஆனால் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஏனைய சில பிரச்சினைகள் தொடர்பில் காலத்திற்குப் பொருத்தமற்ற கருத்துக்களை வெளியிட்டதால் சிறிலங்கா அதிபர் மற்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் கோபத்திற்கு உள்ளான தற்போதைய பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியராச்சிக்கு சமனாகவே சீனாவில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கோத்தபாயவும் நடாத்தப்பட்டார்.

ராஜபக்ச அரசாங்கத்துடன் சீனாவானது நெருக்கமான நட்புறவைப் பேணி வந்ததுடன் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில் சுதந்திரமாகத் தரித்து நிற்பதற்கும் அனுமதியைப் பெற்றிருந்தது. இதன்மூலம் சீனா, பிராந்தியத்தின் அதிகார சக்தியும் சிறிலங்காவின் அயல்நாடான இந்தியாவிற்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தியது.

ராஜபக்சவிற்கு ஆதரவான ஆட்சி ஒன்று சிறிலங்காவில் மீண்டும் தலைதூக்கினால் இது சிறிலங்காவை சீனாவின் வட்டத்திற்குள் மேலும் நெருங்க வைப்பதுடன், இந்தியாவிலிருந்து சிறிலங்கா விலக்கி வைக்கப்படும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றன.

ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சீனாவின் திட்டங்கள் சிலவற்றை புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கையோடு இடைநிறுத்தி வைத்திருந்தமை தொடர்பான தனது அதிருப்தியையும் சீனத் தூதுவர் வெளியிட்டிருந்தார். சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மற்றும் தற்போதைய அதிபர், பிரதமர் ஆகியோருடன் தான் நல்லுறவைப் பேணுவதாகவும் சீனத் தூதுவர் ஜி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சிறிலங்காவின் உள்ளுர் ஊடகத்தில் சீனா தொடர்பாகக் குறிப்பிடப்பட்ட எதிர்மறைக் கருத்தால் அதிருப்தியடைந்துள்ளதாகவும் தூதுவர் தெரிவித்தார்.

தான் சிறிலங்காவின் ஊடகவியலாளர்கள் அடங்கிய நான்கு பிரதிநிதிகள் குழுக்களை அண்மையில் சீனாவிற்கு அனுப்பிய போதிலும், இன்னமும் சீனா தொடர்பான செய்திகள் சிறிலங்காவின் உள்ளுர் ஊடகங்களில் ‘எதிர்மறையானதாகவே’ காணப்படுவதாகவும் சீனத் தூதுவர் தெரிவித்தார்.

மொழியாக்கம் – நித்தியபாரதி