Breaking News

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடருகிறது

தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

அவருக்கு சிகிச்சை அளிக்க அப்பல்லோ ஆஸ்பத்திரியில் டாக்டர் சிவக்குமார் தலைமையில் மருத்துவ குழு அமைக்கப்பட்டது. இதுதவிர லண்டனை சேர்ந்த தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜான் ரிச்சர்டு பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா மற்றும் நிதீஷ் நாயக் ஆகியோர் அடங்கிய சிறப்பு மருத்துவ குழு வரவழைக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இவர்களின் ஆலோசனையில் ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக அவருடைய உடல்நிலையில் விரைவாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபி நிபுணர்கள் மேரி சியாங், சீமா மற்றும் ஜூடி ஆகியோர் வரவழைக்கப்பட்டனர்.

இவர்களில் மேரி சியாங் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். சீமா மற்றும் ஜூடி ஆகியோர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் கை, கால்களை அசைப்பதற்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறார்கள். எழுந்து உட்காருவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. விரைவில் நடப்பதற்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

நுரையீரல் நோய் தொற்று குணமாகி உள்ள நிலையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட செயற்கை சுவாசம் அவ்வப்போது நிறுத்தப்பட்டு இயற்கையாக சுவாசிப்பதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜெயலலிதா தனக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டு அறிகிறார்.

மேலும் தனக்கு என்ன வேண்டும் என்பதையும் அவரே கேட்டு வாங்கி சாப்பிடுகிறார். கடந்த சில தினங்களாக ஜெயலலிதாவுக்கு, அவரது வீட்டில் இருந்து உணவு தயார் செய்யப்பட்டு கொண்டு வரப்படுகிறது என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிசியோதெரபி பயிற்சிகள் முடிந்து அவர் இயல்பாக நடக்கத்தொடங்கிய உடன் ஜெயலலிதா வீடு திரும்புவார் என்று நலம் விசாரிக்க வருபவர்களிடம் டாக்டர்கள் மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு நேற்று 46-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதா உடல்நிலையில் நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதைத்தொடர்ந்து டாக்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் தனி வார்டுக்கு மாற்றப்பட உள்ளார். தனிவார்டுக்கு மாற்றுவது குறித்து டாக்டர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் எம்.பி.யும், உத்தரகாண்ட் பா.ஜனதா தலைவருமான தருண் விஜய், தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில தலைவர் காஞ்சி காடக முத்தரையன் ஆகியோர் உள்பட பலர் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தனர். தருண் விஜய் மானசரோவர் ஏரியில் உள்ள புனித நீர் மற்றும் கேதர்நாத் கோவிலில் சிறப்பு பூஜை செய்த ருத்ராட்ச மாலை உள்ளிட்ட பிரசாதத்தை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் வழங்கினார்.

ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அறைக்கு அழைத்துச் சென்று, அவருக்கு அளிக்கும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்கள் தருண் விஜயிடம் விளக்கி கூறினர். சுமார் 40 நிமிடங்கள் தருண் விஜய் ஆஸ்பத்திரியில் இருந்தார்.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த தருண் விஜய் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி திபெத்தில் உள்ள மானசரோவர் ஏரியில் இருந்து எடுக்கப்பட்ட புனித நீரை கொண்டு வந்தேன். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையை சந்தித்து அந்த புனித நீரை கொடுத்தேன். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அவரிடம் கேட்டபோது, “முதல்-அமைச்சர் ஜெயலலிதா முழு உடல்நலம் பெற்றுள்ளார்” என்று தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களையும் சந்தித்து பேசினேன்.

மானசரோவர் ஏரியில் உள்ள புனித நீர் மற்றும் கேதர்நாத் கோவிலில் சிறப்பு பூஜை செய்து கொண்டு வரப்பட்ட ருத்ராட்ச மாலை உள்ளிட்ட பிரசாதத்தை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையிடம், முன்னாள் எம்.பி. தருண் விஜய் வழங்கிய போது எடுத்த படம்.

அவர்களும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் தேறி உள்ளதாகவும், அவர்கள் ஓரிரு நாட்களில் தனி வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் தெரிவித்தனர். மேலும் விரைவில் பூரண குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி தன்னுடைய அன்றாட அலுவலக பணிகளை தொடங்குவார் என்றும் தெரிவித்தனர். அனைத்து தரப்பு மக்களின் பிரார்த்தனையும் நிறைவேறி இருக்கிறது.

திருவள்ளுவர் கங்கை பயணத்துக்கு சிறப்பான உதவி அளித்ததற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உத்தரகாண்ட் மக்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். ஆகையால் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டும் என்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து விடுவார் என்று நம்பிக்கை உள்ளது. கேதர்நாத் கோவிலில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நன்றி தெரிவிக்கும் பூஜையில் ஜெயலலிதாவை அழைக்க விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்பதற்காக டாக்டர்களை உள்ளே சந்திக்க சென்றேன். டாக்டர்கள் சிரித்த முகத்தோடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார். சந்தோஷமாகவும், நல்ல சுகத்தோடும் இருக்கிறார்கள் என்றும் கூறினார்கள். அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள கோவிலில் நாளை (இன்று) கும்பாபிஷேகம் நடக்கிறது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எப்போதும் தெய்வத்தின் துணை இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு அடையாளம். நாங்கள் மிக சந்தோஷமாக இருக்கிறோம். ஒரு குடும்பத்தில் உள்ள தாயை போல் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை எல்லாரும் பார்க்கிறார்கள். நாங்கள் எங்கு சென்றாலும் எங்களிடம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து கேட்டறிகிறார்கள். முதல்- அமைச்சர் மீது மக்கள் வைத்திருக்கும் பாசம் வேறு எந்த தலைவருக்கும் கிடைக்காது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா நீண்ட வருடங்கள் ரொம்ப நல்லா இருப்பார்கள். அந்தளவுக்கு மக்களுக்கு சேவை செய்யும் ஜெயலலிதாவுக்கு எந்த குறையும் இறைவன் வைக்க மாட்டார். நாங்கள் இப்போது தேர்தல் பிரசாரத்துக்கு செல்கிறோம். தமிழகத்தில் 3 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் மாபெரும் வெற்றியை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் தருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.