Breaking News

முதன்முதலாக மாவீரர்களுக்கு விளக்கேற்றியவர் சம்பந்தன்



ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் முதன்முறையாக மாவீரர்களுக்காக விளக்கேற்றிய தலைவர் இரா. சம்பந்தனே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை யாரும் மறுக்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணம் என்பது காலத்திற்கு ஏற்ப நகர்ந்து செல்வதனை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் தின நிகழ்வு நேற்று மாலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்புக் காரியாலயத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பா. அரியநேத்திரன், வடக்கு, கிழக்கில் 32 மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ளதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனத்திற்காகப் போராடி களத்திலே உயிர்நீத்த மாவீரர்களின் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அரசிடம் அனுமதி கேட்பது முட்டாள் தனம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2002 ஆம் ஆண்டு வரை 17 ஆயிரத்து 688 பேர் மாவீரர்களாக மடிந்துள்ளதாகவும் 2002 ஆம் ஆண்டில் இருந்து 2009 மே 19 வரை 50 ஆயிரம் மாவீரர்கள் களப் பலியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான மாவீரர்களின் தியாகங்களால் தான் தமிழ் மக்களின் பிரச்சினை சர்வதேச அரங்கிலே பேசப்படுவதாகவும் இதனை மறக்க முடியாது என்றும் பா. அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார். 

தந்தை செல்வா, அமிர்தலிங்கம், தலைவர் பிரபாகரன், போன்றவர்கள் கடந்த காலங்களில் பல ஏமாற்றங்களைக் கண்டனர். தற்போதைய தலைவர் இரா. சம்பந்தன் ஏமாற்றப்படமாட்டார் என நான் சொல்லவில்லை.

இவ்வாறான ஏமாற்றங்கள் வராமல் இராஜதந்திரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணம் சென்று கொண்டிருக்கின்றது. மாவீரர்களின் கனவுகளுக்கு அப்பால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படவில்லை.

தலைவர் பிரபாகரனூடாக ஓரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருந்து வந்தது. 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்மைக் கூட உருவாக்கியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.

ஆனால் 2009 ஆம் ஆண்டு வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு நேர அரசியல் பணியைச் செய்யவில்லை. அப்போது முழுநேர அரசியல் பணியைச் செய்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் தான்.

2009 மே 09 க்குப் பிற்பட்பட காலப் பகுதியில் இருந்து தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு நேர அரசியல் பணியை முன்னெடுத்துள்ளது.

சர்வதேச தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக மாத்திரம் சம்பந்தனை பார்க்கவில்லை. 2009 ஆம் அண்டில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை 3 நாடாளுமன்றத் தேர்தல், 2 மாகாண சபைத் தேர்தல், 8 உள்ளூராட்சி சபைத் தேர்தல், போன்றவற்றைச் சந்தித்துள்ளோம்.

இதன்போது, தமிழ் மக்கள் கொடுத்த ஆணையினாலே தற்போது வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது.

வடக்கு, கிழக்கு தாயகத்தின் தலைமை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே என்பதை தமிழ் மக்கள் நிரூபித்துள்ளார்கள் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.