சங்கிலியன் பூங்கா மலர்க் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது
வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமான மலர்க் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை 11ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
வடமாகாண சுற்றாடல் அமைச்சால் தாவர உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்களின் பங்கேற்புடன் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கண்காட்சியைப் பார்வையிடத் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருவதோடு மரக்கன்றுகளையும் பூச்செடிகளையும் வாங்கிச் செல்கின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் பயன்தரு மரக்கன்றுகளும் நிழல் மரக்கன்றுகளும் பூச்செடிகளும் விற்பனையாகி வருவதாக மலர்க் கண்காட்சியில் பங்கேற்றுள்ள பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்மலர்க் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களைக் கிளை விட்ட தென்னை மரம் ஒன்றும் அதிக அளவில் கவர்ந்து வருகிறது. தென்னை மரங்கள் கிளை விடுவது மிகவும் அரிதாகவே நிகழும் அபூர்வம். சங்கிலியன் பூங்காவில் நுழைவு வாசலுக்கு எதிரே உள்ள வளவிலேயே இந்த அபூர்வத் தென்னை காணப்படுகிறது. கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்கள் இக்கிளைத் தென்னையைப் பார்வையிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.