Breaking News

ஆவா குழுவுடன் தொடர்புடைய சிப்பாய் கைது குறித்து இராணுவத்துக்குத் தெரியாதாம்

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவுடன் இணைந்து செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல்களை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன நிராகரித்துள்ளார்.


“ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் இராணுவத்தில் பணியாற்றும் எவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக சிறிலங்கா காவல்துறையிடம் இருந்து இராணுவத் தலைமையகத்துக்கு எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை.

இதுதொடர்பாக யாழ்.படைகளின் தளபதியிடம், பாதுகாப்பு அமைச்சு தகவல் கோரியுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இருந்து இராணுவ சேவைக்கு சமூகமளிக்காத ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது பற்றி பாதுகாப்பு அமைச்சு விசாரித்து வருகிறது.

அவ்வாறு ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தால், அதுபற்றி இராணுவத்தினருக்குத் தெரியவந்திருக்கும். எனினும் இந்தக் கைது பற்றி இதுவரையில் இராணுவத்துக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூவரில் ஒருவர், சிறிலங்கா இராணுவ பொறியியல் படைப்பிரிவில் பணியாற்றுபவர் என்று கூறப்படுகிறது.

பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் இதனை நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

உடுவிலில் வைத்து கைது செய்யப்பட்ட சகோதரர்களில் ஒருவரான இந்திரலிங்கம் கபிலோசன் என்பவரே, சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து செயற்பட்டவராவார்.