Breaking News

யுத்தத்திற்கு பின்பே கூட்டமைப்பு தொடங்கப்பட்டது – வரலாற்றை மாற்றும் சம்பந்தன்?




யுத்தம் முடிவடைந்த பிறகு பின் தேர்தல் நடைபெற்றபோது நாங்கள் பல கட்சிகளாகப் பிரிந்து இருக்க முடியாது என்ற காரணத்தால் எல்லாக் கட்சிகளுடனும் கலந்தா லோசித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதாக சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 நேற்று (06-11-2016) தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி முதன்மைப்பணிமனைத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய இரா.சம்பந்தன் அவர்கள் மேலும் தெரிவித்தாதவது,

இந்த நாட்டில் உள்ள ஆட்சிமுறை மாற்றப்பட வேண்டும் என்பதை முதலில் முன்வைத்தது தமிழரசுக் கட்சி. அந்தக் காலத்தில் பல தமிழ்த் தலைவர்கள் கூட அதை எதிர்த்தார்கள்.

1976ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் முன்வைக்கப்பட்ட தனிநாட்டுக்கோரிக்கையானது எங்களால் 1987 இந்திய – இலங்கை ஒப்பந்ததுடன் உருவான மாகாண சபையுடன் கைவிடப்பட்டது. அதன்பின் ஒன்றுபட்ட நாட்டிற்குள் தீர்வு என்பதே எங்களின் கொள்கையாக இருக்கிறது. பல்வேறு தேர்தல்களில் மக்களும் பல தடவைகள் தங்கள் ஆணையை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதிகாரப்பங்கீட்டின் அடிப்படையில் சமஷ்டி முறையிலான தீர்வைத்தான் நாங்கள் கேட்டிருக்கின்றோம். தமிழ் பேசும் பிரதேசம் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கவேண்டும். நாடாளுமன்றமானது அரசியல்சாசன சபையாக மாற்றப்பட்டிருக்கிறது. தீர்வு தொடர்பான இடைக்கால அறிக்கை இந்த மாத இறுதிக்குள் வர இருக்கிறது. அறிக்கை வந்தவுடன் அது தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடுவோம். அடுத்த வருடத்தில் நாம் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.

- துளியம்