Breaking News

யாழ்.மாணவர்களின் கொலை: ஜனாதிபதியை சந்திக்க ஏழு கட்சிகள் தீர்மானம்



யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை மற்றும் யாழில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்து நீதியான விசாரணைக்கு கோரிக்கை விடுப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணிலை சந்திப்பதற்கு ஏழு கட்சிகள் தீர்மானித்துள்ளன.

ரெலோ அமைப்பின் அழைப்பின் பேரில் யாழ்.வல்லைவெளியில் அமைந்துள்ள விடுதியொன்றில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஆகிய ஏழு கட்சிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூடி ஆராய்ந்து இத் தீர்மானத்தை எடுத்துள்ளன. குறித்த சந்திப்பு தொடர்பாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் என்.ஸ்ரீஸ்காந்தா கருத்துத் தெரிவிக்கையில்-

”யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடைய படுகொலை தொடர்பில் பாரபட்சம் அற்றதும் எவ்வித தலையீடுகளும் அற்ற நீதி விசாரணைகளையே நாம் கோருகிறோம். மேலும் இப் படுகொலைகளின் பின்னணியும் காரணிகளும் விசாரணையூடாக கண்டறியப்பட வேண்டும். முழு உண்மையும் கண்டறியப்பட்டால் மாத்திரமே எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க முடியும்.

இப் படுகொலைகளைத் தொடர்ந்து வாள்வெட்டுக் குழுக்கள் எனக் கூறப்படுகிற குழுக்களை சம்பந்தப்படுத்தி வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் காரணமாக, வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் மத்தியில் ஓர் அச்ச சூழ்நிலை ஏற்பட்டிருப்பதையும், அதனை மேலும் தீவிரப்படுத்தும் விதத்தில் சில தரப்பினரினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை சுட்டிக்காட்டியும், சட்டமும் ஒழுங்கும் நிலை நாட்டப்படுவதையும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தக் கோரியும் ஓர் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளோம். இது எங்கு எப்போது நடத்தப்படும் என பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.