விக்னேஸ்வரன் அதிருப்தி கூட்டமைப்பை பாதிக்காது: சுமந்திரன்
தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது வடமாகாண முதல்வர் விக்னேஷ்வரன் அதிருப்தி தெரிவித்திருப்பது எந்த விதத்திலும் கூட்டமைப்பை பாதிக்காது என்றும், அரசியல் கட்சிக்குள் ஜனநாயகம் முழுமை பெறுவது நல்ல விடயங்கள் தான் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மீனவர் பிரச்சனை தொடர்பாக இந்திய - இலங்கை அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்க புதுடெல்லி சென்றிருந்தார்.
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாமல் இருப்பது நியாயமான விஷயம் என்றும், அவர்களுடைய கருத்தை முதல்வர் பிரதிபலிப்பதாகவும் இதனால் கூட்டமைப்பிற்கு எந்த விதத்திலும் பாதிப்பு வராது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் குற்ற விசாரணை தொடர்பான விடயங்களும், காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதிலும் மிகமிகத்தாமதமாக நடந்து வருவதாகவும், இலங்கையில் எந்த அரசாங்கம் வந்தாலும் அதனை தட்டிக் கழிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை பொறுப்பு கூறல் நடவடிக்கையை ஏற்றுக் கொண்டதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பின் வற்புறுத்தல்தான் காரணம் என்றும், அதன் தாக்கத்தை குறைக்க எப்போதும் செயல்பட மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
பெளத்த மயமாதல் நல்லிக்கணத்திற்கு எதிரானவை
இலங்கையில் பெளத்த மயமாதல் குறித்து பேசிய அவர், போர் முடிவடைந்த போது இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாகவும், பின் தணிந்திருந்த நிலையில் மீண்டும் திடிரென துரிதம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.,
இதற்கு பின்னால் இருந்து செயல்பட கூடியவர்கள் யார் என்று எங்களுக்கு தெரியும் என்று அவர் கூறினார்.
இதுபோன்ற செயற்பாடுகள் நல்லிக்கணத்திற்கு எதிரானவை என்றும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு இணைப்பு
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைப்பு என்ற கோரிக்கை எய்தப்பட வேண்டும் என்றும், அதுகுறித்து முஸ்லிம் மக்களோடும் முஸ்லிம் தலைவர்களோடும் பேசிக் கொண்டிருப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.
முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதற்கு முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவிப்பது பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும்போது, பெண்களுக்கு சம அந்தஸ்து கிடைப்பதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் என்று சுமந்திரன் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு சட்டம்
இலங்கையில் உத்தேச புதிய அரசியலமைப்பு சட்டம் சுமுகமாக தயாராகி வருவதாகவும், நவம்பர் 19 ஆம் தேதி உப குழுக்களின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், டிசம்பர் முதல் வாரத்திற்குள் வழிநடத்தல் குழு கையாண்ட மிக முக்கியமான இடைக்கால அறிக்கை வெளியிடப்படும் என்றும் சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி ஓர் அரசியலமைப்பு சபையை உருவாக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு அது மார்ச் மாதம் நிறைவேறி ஒரு வழிநடத்தல் குழு ஒன்று உருவாக்கப்பட்டது என்றார்.
அதனோடு 6 உப குழக்கள் நியமிக்கப்பட்டதாகவும், அந்தக் குழுக்கள் கடந்த ஆறு மாதங்களாக மிகவும் தீவிரமாகப் பணியாற்றி, தங்களுடைய அறிக்கையை வழிநடத்தல் குழுவிடம் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார்.
இந்த வழிநடத்தல் குழுவில் தானும், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் அங்கம் வகிக்கிப்பதாகவும், வழிநடத்தல் குழுவானது சில முக்கியமான விடயங்களை தானாக ஆராய்ந்து சில தீர்மானங்களை எடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்னும் ஓரிரு விடங்கள் பேசப்பட இருப்பதாகவும், இந்த விடயங்களை இரண்டு பகுதிகளாக இடைக்கால அறிக்கைகளாக அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து இன்னும் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை என்றும், மேலும், கட்சிகளுக்கு இடையே தங்களுடைய சொந்த நிலைப்பாடுகளை அறிவித்தால் இணக்கப்பாடு எட்டப்படுவது சிரமமாக இருக்கும் என்பதால் தாங்கள் அனைவரும் தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த தீர்மானத்திற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷே ஆதரவு கூட்டணியில் அங்கம் வகிப்பவர்களும் ஒப்புதல் தெரிவித்ததாக கூறினார்.
நவம்பர் 19 ஆம் தேதி உப குழுக்களின் இடைக்கால சமர்பிக்கப்படும் என்றும், டிசம்பர் முதல் வாரத்திற்குள் வழிநடத்தல் குழு கையாண்ட மிக முக்கியமான இடைக்கால அறிக்கை வெளியிடப்படும் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வெளியிடப்படும் போது, பொதுமக்களுக்கு என்ன விதமான புதிய அரசியலமைப்பு யாப்பு என்பது தொடர்பான செய்தி தெளிவாக தெரியவரும் என்றும் கூறினார்.
- BBC