தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரே கட்சியாக மாறுமா?
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒரே கட்சியாக மாற்ற நினைப்பது தவறு என்று அக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மீனவர் பிரச்சனை தொடர்பாக இந்திய - இலங்கை அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்க புதுடெல்லி சென்றிருந்த அவர், இன்று ஞாயிற்றுக்கிழமை, பிபிசிக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒருங்கிணைந்து ஒரு கட்சியாக உருவாக்குவதில் என்ன பிரச்சனை என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த சுமந்திரன், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்புதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றும், அதை ஒரு கட்சியாக மாற்ற வேண்டும் என்று நினைப்பது தவறு என்றும் கூறியுள்ளார்.
அது கூட்டமைப்பாகத் தான் இருக்கிறது, அப்படியாகத் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
ஒரு கட்சியாக மாற வேண்டுமானால், அதுதொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்தகைய தீர்மானம் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்க மட்டுமே தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது என்று சுமந்திரன் தெரிவித்தார்.