ஆவா குழுவின் பின்னால் இராணுவம் இல்லை - ருவான் விஜேவர்த்தன
வடக்கில் இராணுவ, அரசியல் பின்னணியுடனோ, அரசாங்கத்தின் பின்புலத்துடனோ ஆவா குழு செயற்படவில்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
பியகமவில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
“மூன்று பத்தாண்டுகளாக நீடித்த போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சட்டத்தை தமது கையில் எடுத்துக் கொள்வதற்கு எந்தவொரு நபருக்கோ, அல்லது அமைப்புக்கோ அரசாங்கம் இடம் அளிக்காது.
ஆவா என்று அழைக்கப்படும் சிறிய குழுவினர் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
ஆவா குழுவையும், சிறிலங்கா இராணுவத்தையும் தொடர்புபடுத்தி, அரசியல் ஆதாயம் தேடுவதற்கு சில தனிநபர்கள் முயற்சிக்கின்றனர்.
ஆவா குழுவில் செயற்படும் நபர்களை பாதுகாப்புப் படையினர் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.